பிரேசில் கால்பந்து அணியின் ஐகானிக் நட்சத்திர வீரர் நெய்மர் ஜூனியர் (34) தனது 16 ஆண்டுகால சர்வதேசப் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று சான்டோஸ் கிளப் அணியின் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிரேசில் தேசிய அணிக்காக இனி விளையாடப் போவதில்லை என முறைப்படி அறிவித்தார். இந்தத் திடீர் அறிவிப்பு உலகக் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தேசிய அணியுடனான எனது பயணம் முடிவுக்கு வந்துவிட்டது. நான் சரித்திரம் படைத்தேன், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தேன். அணிக்காக என் ரத்தத்தையும் வாழ்க்கையையும் அர்ப்பணித்தேன். இனி பிரேசில் அணிக்காக விளையாட விரும்பவில்லை” என நெய்மர் உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினார்.
சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பிரேசில் அணி 16வது சுற்றிலேயே வெளியேறியது. அந்தத் தோல்வியின் எதிரொலியாகவே இந்த ஓய்வு முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 2010ஆம் ஆண்டு பிரேசில் அணியில் அறிமுகமான நெய்மர், 129 சர்வதேசப் போட்டிகளில் 80 கோல்கள் அடித்து நாட்டின் சகல கால அதிக கோல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். 2013ஆம் ஆண்டு ஃபிஃபா கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பையை வென்றதுடன், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் அணியின் கேப்டனாகச் செயல்பட்டு தங்கப் பதக்கத்தையும் பிரேசிலுக்கு பெற்றுத் தந்தார்.
இதையும் படிங்க: எல்லாம் முடிஞ்சு போச்சு..!! கதறி அழுத நெய்மர்.. ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய ஓய்வு அறிவிப்பு..!!

காயங்கள், அழுத்தங்கள், ரசிகர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல சவால்களுக்கு மத்தியிலும் அவர் ஒரு தலைமுறையின் மிகச் சிறந்த கால்பந்து முகமாக விளங்கினார். நெய்மரின் ஓய்வு பிரேசில் கால்பந்து வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருந்த அவர், கிளப் கால்பந்தில் தொடர்ந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தேசிய அணியில் அவரது இடத்தை நிரப்புவது பிரேசில் அணிக்குப் பெரும் சவாலாக அமையும் என ரசிகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நெய்மரின் சாதனைகள் எப்போதும் பிரேசில் கால்பந்தின் பொன்னேடுகளில் பொறிக்கப்பட்டிருக்கும். அவரது பங்களிப்பு, திறமை மற்றும் உணர்ச்சிகரமான பயணம் இளம் தலைமுறை வீரர்களுக்கு தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும். இந்த ஓய்வு அறிவிப்பு கால்பந்து உலகைச் சலனப்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: FIFA World cup 2026: 2-1 கணக்கில் பிரேசில் அணி அபார வெற்றி..!! ரவுண்ட் ஆஃப் 16-க்கு முன்னேற்றம்..!!