அய்ச்சி-நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தனது அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது. இந்தோனேசியாவுக்கு எதிரான ‘பி’ பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகளில் இந்திய அணி மொத்தம் 36 கோல்களை அடித்துள்ளது.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தானை 19-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது. அந்தப் போட்டியில் 8 கோல்கள் அடித்து சாதனை படைத்த 22 வயதான தீபிகா ஷெராவத், இந்தோனேசியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் இந்தியாவுக்கான முதல் கோலை தீபிகா அடித்தார். தொடர்ந்து 28 மற்றும் 40-வது நிமிடங்களிலும் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதன் மூலம் இரண்டு போட்டிகளில் மட்டும் அவரது கோல் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய விளையாட்டில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்! 6 பதக்கங்களுடன் முன்னேறும் வீரர்கள்!

ருதுஜா ததாசோ பிசலும் சிறப்பாக விளையாடி 15, 20 மற்றும் 38-வது நிமிடங்களில் மூன்று கோல்களை அடித்தார். நவ்நீத் கவுர் 35, 56 மற்றும் 57-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் ஒரே போட்டியில் இந்திய அணியின் மூன்று வீராங்கனைகள் ஹாட்ரிக் அடித்தனர்.
மேலும், சுனெலிதா டோப்போ, லால்ரெம்சியாமி மற்றும் சாக்ஷி ராணா ஆகியோர் தலா 2 கோல்களும், கேப்டன் சலிமா டெடே மற்றும் இஷிகா சவுத்ரி ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியாவின் தொடர் தாக்குதலுக்கு இடையே இந்தோனேசியாவால் ஒரே ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று ‘பி’ பிரிவில் வலுவான நிலையில் உள்ளது. இரண்டு ஆட்டங்களில் இந்தியா 36 கோல்கள் அடித்துள்ள நிலையில், எதிரணியிடம் இருந்து ஒரு கோல் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளது.
இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் செப்டம்பர் 23-ம் தேதி தாய்லாந்தை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க: வங்கதேசத்தை சிதறடித்த இந்தியா! 114 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி! இறுதிப்போட்டிக்கு பறந்த மகளிர் அணி!