தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது இயக்குனர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ திரைப்படம். சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான தனித்துவமான ஒரு பிணைப்பை நகைச்சுவை மற்றும் உணர்வோட்டத்துடன் சொல்லும் இந்த படம், வருகின்ற ஜூலை 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில், தமிழ் ரசிகர்களின் நகைச்சுவை நாயகனான வைகைப்புயல் நடிகர் வடிவேலு மற்றும் மலையாள சினிமாவின் திறமைமிக்க நடிகரான பகத் பாசிலும் இணைந்து முதல் முறையாக நடித்து உள்ளனர்.
இருவரும் மிக வித்தியாசமான பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தாலும், திரையில் அவர்களது 'காமிக்-டிராமா' கேமிஸ்ட்ரி ரசிகர்களை ரசிக்கத்தக்க வகையில் இருப்பதோடு மட்டுமல்லாமல் பெரிய எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இப்படி இருக்க, வி. கிருஷ்ணமூர்த்தி இந்த படத்திற்கு கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதோடு, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ளார். இவர் முன்பே பல பிரபலமான தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் திரைப்படங்களுக்கு பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
மேலும் சுதீஷ் சங்கர், திரைப்படத்தை ஒரு சாலைவழிப் பயணமாக மட்டுமல்ல, உணர்வுப்பூர்வமான வாழ்க்கைப் பயணமாகவும் வடிவமைத்துள்ளார் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. அதேபோல் இசையமைப்பில் யுவன் ஷங்கர் ராஜா, தனது தனித்துவமான பாணியை இந்த படத்திலும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். பாடல்களும் பின்னணிச் இசையும், காட்சிகளின் உணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில், நடிகர் வடிவேலு, ஒரு அல்சைமர் நோயாளியான பணக்காரராக இப்படத்தில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் அவர் காட்டிய நடிப்புத் திறமை, தற்போது ‘மாரீசன்’ படத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நடிகர் பகத் பாசில், சினிமா விமர்சகர்களிடையே தன் தனிப்பட்ட நடிப்பு பாணிக்காக பரவலாக பாராட்டப்படுபவர். அந்தவகையில் இந்தப்படத்திலும், ஒரு பயணியின் முகமூடியில், வெளிப்படையாக பொருளாதார நோக்கத்துடன் நடக்கும் ஒருவராக என நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, டெலிபோன் ராஜா, சரவணா சுப்பையா, ஹரிதா மற்றும் கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் முக்கிய மையக்கருத்து என பார்த்தால், பயணத்தையே மையமாகக் கொண்டுள்ளதாக இருக்கிறது. அதாவது திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் வடிவேலு பணம் எடுக்கும் தருணத்தில், பகத் பாசில் அந்த பணத்தை பார்த்து விடுகிறார். பணத்தை கைப்பற்றுவதற்காக அவர், வடிவேலுவை “நான் உங்களை பைக்கில் டிராப் செய்கிறேன்” என கூறி நாகர்கோவிலுக்கு அழைத்துசெல்கிறார்.
இதையும் படிங்க: "சினிமாவில் சாதி இல்லையென்று சொல்வது மிகப்பெரிய பொய்" - நடிகர் கலையரசன் காட்டமான பேச்சு..!
இப்படி ஒரு பைக் பயணத்தில் அவருடன் கிளம்புகிறார். இந்த பயணத்தில் இடைவிடாமல் வரும் சம்பவங்கள், மகிழ்ச்சியும், சோகமும், நகைச்சுவையும், விமர்சனங்களும் அதிகமாக நிறைந்திருக்கின்றன. முக்கியமாக, வடிவேலுவின் மனநிலை, அல்சைமர் காரணமாக ஏற்படும் குழப்பங்கள், மற்றும் பகத் பாசிலின் திட்ட மிடலான முயற்சிகள் ஆகியவை பல சிக்கல்களை உருவாக்குகின்றன. இப்படி இருக்க, பயணத்தின் முடிவில், பகத் பாசில் வடிவேலுவிடம் இருந்து பணத்தைப் பெறுகிறாரா அல்லது வேண்டாம் என முடிவெடுக்கிறாரா? என்பது தான் கதையின் திருப்புமுனையாக அமைந்துள்ளது.
குறிப்பாக இந்த படத்தின் முடிவில், வாடகை வாழ்க்கை, பாசமும் பேராசையும் இடையிலான போராட்டம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், நடிகர் வடிவேலு, மாமன்னன் திரைப்படத்தில் தனது புதிய யுக்தியை திரையரங்குகளுக்கு கொண்டு வந்தார். அந்த படத்தில் அவர் சீரியஸ் மற்றும் தன்னிலை இழந்த கதாபாத்திரத்தில் நடித்தது, பெரும் பாராட்டைப் அவருக்கு பெற்று தந்தது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, மாரீசன் படத்திலும் அவர் சந்தோஷம், வருத்தம், குழப்பம், உணர்ச்சி மற்றும் நகைச்சுவை என எல்லா வெளிப்பாடுகளையும் இணைத்து சிறப்பாக நடித்துள்ளார் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் பலரது எதிர்பார்ப்பையும் எகிற செய்த ‘மாரீசன்’ திரைப்படம் ஒரு சாதாரண சாலைப் பயணமாக அல்ல, மனிதனின் உளவியல், ஆசை, நிலைத்தன்மை, முடிவெடுக்கும் தருணங்கள், மனநிலை குறைபாடுகள் மற்றும் மனித நம்பிக்கைகளைப் பிரதிபலிக்கும் ஒரு கலைச்சார்ந்த வாழ்க்கை படமாக அமைந்துள்ளது. எனவே ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் இப்படம், தமிழ் சினிமாவில் முக்கியமான படமாகவும், வடிவேலு – பகத் பாசில் கூட்டணிக்கு அடையாளமாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: காதல் வாழ்க்கை.. கடந்துபோன பந்தம்.. விவாகரத்து பெற்ற அந்த தருணம்..! குடும்ப ரகசியத்தை உடைத்த நடிகர் விஷ்ணு விஷால்..!