தமிழ் சினிமாவில் பல முக்கியமான படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களை நடித்து கைதேர்ந்தவர் தான் நடிகர் விக்னேஷ். 'கிழக்குச் சீமையிலே', 'சின்னதாய்', 'பசும்பொன்' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில வருடங்களாக திரையுலகத்திலிருந்து விலகி இருந்தார். சொந்த ஊரான ஈரோட்டில் தொழில் செய்து வந்த விக்னேஷ், தற்போது மீண்டும் கதாநாயகனாக திரையுலகில் ‘ரெட் பிளவர்’ திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ளார்.
இவர், சந்திரமுகி, எந்திரன், இந்தியன் 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களின் விசுவல் எஃபெக்ட் பகுதிகளில் பணியாற்றிய அனுபவமுள்ளவர். இப்படி இருக்க ‘ரெட் பிளவர்’ ஒரு சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் திரைப்படமாம். இந்த படம், 2047-ம் ஆண்டில் நடக்கும் ஒரு கற்பனைச் சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற 'ஆபரேஷன் சிந்தூர்' போன்ற இந்த படத்தின் கதையும் அமைந்துள்ளதாக இயக்குநரும், நடிகருமான விக்னேஷும் தெரிவித்துள்ளார். இது தேசிய உணர்வை எழுப்பும் வகையிலும், இந்தியாவின் பெருமையை உயர்த்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில், விக்னேஷுக்கு ஜோடியாக மனிஷா ஜஷ்னானி நடித்துள்ளார். மேலும், நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தக் கூட்டணி, கதையின் நம்பகத்தன்மையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ரெட் பிளவர்’ திரைப்படத்தை ஸ்ரீ காளிகாம்பாள் பிச்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. மாணிக்கம் தயாரித்துள்ளார். இந்த படம், கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வருகிற ஆகஸ்ட் 8-ம் தேதி, 400 திரையரங்குகளில் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற, ரசிகர்கள் மற்றும் ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. டிரெய்லர் வெளியீட்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதையும் படிங்க: விஷால் - துஷாரா விஜயன் இணையும் புதிய திரைப்படம்..! அதிரடியாக வெளியான அப்டேட்...!
அதேபோல், சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற புரோமோஷன் நிகழ்வில், தயாரிப்பாளர் மாணிக்கம் மற்றும் நடிகர் விக்னேஷ் கலந்து கொண்டு, படத்தை பற்றி பத்திரிகையாளர்களிடம் விரிவாகப் பேசினர். அதன்படி அவர் பேசுகையில், " நான் 30 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி, சொந்த ஊருக்குப் போய் தொழிலில் ஈடுபட்டேன். பின்னர் இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் என்னிடம் ‘ரெட் பிளவர்’ கதையை கூறினார். அந்தக் கதையை நான் கேட்டதும், இது ஒரு வித்தியாசமான கதை என்று உணர்ந்தேன். இயக்குநர் என்னிடம், 'இந்தக் கதையை முதலில் நடிகர் விஜய்க்காக எழுதி வைத்தேன். ஆனால் அவர் அரசியலில் சென்றதால், உங்களை வைத்து இயக்க முடிவு செய்தேன்' என்றார். அந்த நம்பிக்கையைக் கவுரவிக்க வேண்டிய நிலை எனக்குள் ஏற்பட்டது. அதனால் இந்த படத்தில் நடிக்க முடிவெடுத்தேன்" என தெரிவித்தார்.

இந்தத் திரைப்படம், சாதாரண பாணியில் உருவான படமல்ல, அதிக தொழில்நுட்பம், அதிரடி ஆக்ஷன், சமூகக் கருத்து, மற்றும் தேசிய உணர்வு ஆகியவை கலந்து உருவாகியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திரையுலகிற்கு திரும்பும் விக்னேஷின் ரீ என்ட்ரியை ரசிகர்கள் உற்சாகமாக எதிர்நோக்கி உள்ளனர்.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் அனிருத்தின் பிடியில் ‘மதராஸி’..! வெளியானது பர்ஸ்ட் சிங்கிள் ‘சலம்பல’..!