தமிழ் சினிமா மட்டும் அல்லாது இந்திய திரையுலகமே ஒருவரை மட்டும் சூப்பர் ஸ்டாராக இதுவரை ஏற்று கொண்டு இருக்கிறது என்றால் அவர் தான் ரஜினிகாந்த். தனது நடிப்பின் தனித்துவம், கவர்ச்சியான ஸ்டைல், மக்களிடம் ஏற்படுத்திய செல்வாக்கு, சமூகத்தில் கொண்ட தாக்கம் என அனைத்திலும் அவர் வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளார். அந்த சூப்பர் ஸ்டார் இன்று திரையுலகில் 50 ஆண்டுகளை முழுமையாக முடித்திருக்கிறார் என்பது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தினருக்கு பெரும் பெருமை அளிக்கிறது.
குறிப்பாக 1975-ம் ஆண்டு ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தில் வெளியாகிய 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரஜினிகாந்த். இயக்குனர் கே. பாலச்சந்தர் அவர்களுக்கு குருவாக இருப்பவராகவும், வழிகாட்டியாக இருப்பவராகவும் ரஜினி தொடர்ந்து எடுத்துரைத்து இருக்கிறார். இன்று, அந்தத் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு சரியாக ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 50 ஆண்டுகளில் ரஜினிகாந்த் 171 படங்களில் நடித்து இருக்கிறார். வெறும் ஹீரோ கதாபாத்திரங்களில் மட்டும் இல்லாமல், எதிர்மறை குணம் கொண்ட கதாப்பாத்திரங்கள், காமெடி, சமூக செய்தியுடன் கூடிய படங்கள், பாஸ்கரா, ராகவேந்திரா போன்ற ஆன்மீகப் படங்கள் என அனைத்திலும் தனது நடிப்பின் அசூர தனத்தை காட்டியவர். குறிப்பாக 'படையப்பா', 'பாஷா', 'முள்ளும் மலரும்', 'அருணாசலம்', 'சிவாஜி', 'எந்திரன்', 'கபாலி', 'ஜெயிலர்' என ஏராளமான ஹிட் படங்கள் இவரின் பெயருடன் இணைந்துள்ளன. எளிமையான பேச்சு, பக்தியுடன் கூடிய மனப்பான்மை, தன்னடக்கம், மற்றும் சமூக சிந்தனைகள் கொண்ட நடிப்பு என இவை தான் அவரை மற்ற நடிகர்களில் இருந்து தனித்து காண செய்கின்றன.
மேலும் சூப்பர் ஸ்டாரின் வாழ்நாள் சாதனைகளை அங்கீகரிக்க இந்திய அரசு இருமுறை பத்ம விருதுகளை வழங்கியுள்ளது.. இதோடு 2021-ம் ஆண்டில், இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான 'தாதா சாகேப் பால்கே விருது' இவருக்கு வழங்கப்பட்டது. இது அவர் பெற்ற மிகப்பெரிய அங்கீகாரங்களில் ஒன்றாகும்.

இப்படி இருக்க ரஜினிகாந்த் வெறும் ஒரு நடிகர் அல்ல, மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு வாழும் தீர்க்கதரிசி போன்றவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும் பெரிய விழாக்களாகவே கொண்டாடப்படுகிறது. சினிமா வெளியீட்டுக்கு ஒரு வாரம் முன்பே ரசிகர்கள் தீபாவளி போல போஸ்டர் அடித்து விழாக் கொண்டாட்டம் நடத்துவார்கள். அவரது ஒவ்வொரு வசனமும், ஸ்டைலும் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும் வகையில் மாறிவிடும் என்பது உண்மை. இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 50 ஆண்டுகள் பூர்த்தி செய்ததை முன்னிட்டு தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது 'எக்ஸ்' தளத்தில் உருக்கமான வாழ்த்துப்பதிவை வெளியிட்டுள்ளார். அதில், " 1975 -ம் ஆண்டு வெளிவந்த 'அபூர்வ ராகங்கள்' திரைப்படத்தில் அறிமுகமாகி தற்போது வெளியாகியுள்ள 'கூலி' திரைப்படம் வரை 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ஐம்பதாண்டு காலம் திரையுலகில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கின்ற எனது இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது பாராட்டுகள். அவர் மேலும் பல்லாண்டுகள் நல்ல தேக ஆராக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ்ந்து, மேலும் பல சாதனைகளைப் புரிய எனது நல்வாழ்த்துகள்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "கூலி" ரிலீசுக்கு பின் தனது உடலை தண்டிக்கும் சூப்பர் ஸ்டார்..! வைரலாகும் வீடியோவை பாருங்க..!
இந்த பதிவின் மூலம், சினிமா தாண்டிய ரஜினியின் மனிதநேயம் மற்றும் அவரது வாழ்க்கை பயணத்தின் மீது ஒரு அரசியல்வாதியும் வலியுறுத்தியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.. இன்று சமூக ஊடகங்களில் #50YearsOfSuperstar என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. ரசிகர்கள் ரஜினியின் பழைய மற்றும் புதிய திரைப்படங்களின் காட்சிகளை பகிர்ந்து, நினைவுகளைப் புதுப்பித்து வருகின்றனர். அதோடு ரஜினிகாந்தின் 171வது திரைப்படமாக 'கூலி' வெளியாகி பட்டையைக்கிளப்பி வருகிறது. ரஜினியின் பயணத்தை ஒரு வரியில் விவரிக்க முடியாது. ஒரு பஸ் கண்டக்டராக வாழ்ந்தவர், திரையில் வாழும் ஸ்டாராக மாறி இருக்கிறார். ஆகவே ரஜினிகாந்த், ஒரு நடிப்பின் சிற்பி மட்டுமல்ல. அவர் ஒரு சிந்தனையின் சிகரம், ஒரு மனிதநேயத்தின் முகம். 50 ஆண்டுகள் திரையில் வெற்றிகரமாக பயணித்த ஒரு நடிகர் என்பது தமிழருக்கே பெருமை.

அவரது ஒவ்வொரு வெற்றி, தமிழ்நாட்டின் கலாச்சாரம், ரசிகர் உணர்வுகள், சமூக எதிர்பார்ப்பு ஆகியவற்றை இணைக்கும் பாலம். அவருடைய பயணம் இன்னும் நீண்டதாகவும், பல்வேறு சாதனைகளை அடுத்து தொடர்ந்து கட்டியெழுப்பும் வகையில் இருக்க வாழ்த்துகள். சூப்பர் ஸ்டார் என்ற அந்த ஒரு பட்டமே, இன்றும் தமிழகத்தின் பெருமை குறியீடாக வாழ்கிறது.
இதையும் படிங்க: சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்..! புகைப்படத்துடன் லோகேஷ் கனகராஜ் வாழ்த்து..!