2025ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் சவுதி அரேபியாவில் இருந்து தான் நாடு கடத்தப்பட்டு உள்ளனர். அமெரிக்கா 2வது இடத்தில் உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மியான்மரில் இருந்து 1,591 பேர், மலேசியாவில் இருந்து 1,485 பேர், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 1,469 பேர், பஹ்ரைனில் இருந்து 764 பேர், தாய்லாந்தில் இருந்து 481 பேர், கம்போடியாவில் இருந்து 305 பேர் என பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். வளைகுடா நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், வளைகுடா நாடுகளில் நாடு கடத்தப்படுவதற்கு முக்கிய காரணங்கள் விசா காலத்தை மீறி தங்கியிருத்தல், உரிய அனுமதி இல்லாமல் வேலை செய்தல், தொழிலாளர் விதிகளை மீறுதல், முதலாளிகளை ஏமாற்றிவிட்டு தப்பிச் செல்லுதல் மற்றும் சில குற்றச் செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை என்று கூறினர்.
இதையும் படிங்க: “புடவை எடுக்கக்கூட புருஷனை நம்பியிருந்த பெண்களை...” - மகளிர் உரிமைத் தொகை குறித்து திண்டுக்கல் ஐ.லியோனி சர்ச்சை பேச்சு..!
குறிப்பாக கட்டுமானத் துறையில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அதிகமானோர் வளைகுடா நாடுகளுக்கு செல்கின்றனர். பலர் ஏஜெண்டுகள் மூலம் சென்று, கூடுதல் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் விதிகளை மீறும்போது நாடு கடத்தப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் போலீசாரிடம் சிக்கினால் உடனடியாக நாடு கடத்தப்படுகின்றனர்.

மியான்மர் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் இருந்து நாடு கடத்தப்படுவதற்கு வேறு வகையான காரணங்கள் உள்ளன. இந்த நாடுகள் இணையவழி மோசடி மற்றும் சைபர் குற்றங்களின் மையங்களாக மாறியுள்ளன.
அதிக ஊதியம் தருவதாக வாக்குறுதி அளித்து இந்திய இளைஞர்களை ஈர்க்கின்றனர் அல்லது ஏமாற்றி அழைத்துச் செல்கின்றனர். அங்கு சென்றவர்கள் மோசடிக் கும்பல்களின் கையில் அடிமைகளாக சிக்கி, சட்டவிரோத வேலைகளை செய்ய கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவ்வாறு பிடிபட்டால் நாடு கடத்தப்படுகின்றனர்.
இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க வெளிநாடு செல்பவர்கள் முன்கூட்டியே உள்ளூர் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விசா காலக்கெடுவை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும், உள்ளூர் சட்டங்களுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும், தேவைப்படும்போது விசா நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அதிக கவனம் செலுத்தினால் இத்தகைய நாடு கடத்தல் சம்பவங்களை பெருமளவு குறைக்க முடியும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.4700 கோடி மணல் கொள்ளை... உடனடியா நடவடிக்கை எடுக்கணும்... லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிமுக கடிதம்...!