இந்திய சினிமாவின் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவரான சரோஜாதேவி தனது 87வது வயதில் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என போற்றப்பட்டவர். இவரது மறைவு சினிமா துறைக்கு பேரிழப்பு.
சரோஜாதேவி மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் திரைப்பட நடிகை, அபிநய சரஸ்வதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜாதேவி காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிப்பதாகவும், தனது தனித்துவம் மிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்தவர் சரோஜாதேவி என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எம்ஜிஆர் மற்றும் சரோஜாதேவி ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியா புகழ்பெற்றவை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, சரோஜாதேவி எனும் பெயர் அந்த படங்கள் வாயிலாக என்றென்றும் உச்சரிக்கப்பட்டு கொண்டே இருக்கும் என்றும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும், மூத்த திரைக்கவி கலைஞர் சரோஜாதேவி அவர்கள் வயதுமுப்பின் காரணமாக காலமானார் என்ற செய்தி வருத்தம் அளிப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி என சுமார் 200 திரைப்படங்களுக்கும் மேல் தன்னுடைய சிறப்பான நடிப்பால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தவர் என்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என். டி.ராமராவ், ராஜ்குமார் என, இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஜோடியாக நடித்துப் புகழ்பெற்றவர் என்றும் புகழாரம் சூட்டினார். நடிகை சரோஜா தேவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: உங்க தாத்தா காவிய கலைஞரே காவிமயம் ஆனவரு தான்! நீ சின்ன புள்ளப்பா.. உதயநிதியை கலாய்த்த தமிழிசை..!
இதையும் படிங்க: இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!