தஞ்சாவூர் மாவட்டத்தில் இடைவிடாமல் பெய்து வரும் தொடர் கனமழையால் 1,700 ஏக்கரில் குறுவை, சம்பா பருவ நெற்பயிர்கள் சாய்ந்தும், தண்ணீரில் மூழ்கியும் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்து முளைத்து வீணாகி வரும் நெல் குவியல்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளிடம் நேரடியாக குறைகளை கேட்பதற்காக அ.தி.மு.க பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர் அவர் தஞ்சையில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது எடப்பாடி பழனிச்சாமி கூடியிருந்த ஏராளமான விவசாயிகளிடமும் கொள்முதல் தாமதம் காரணமாக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நனைந்து முளைத்து வரும் நிலை குறித்தும், தொடர் மழையால் மூழ்கி பாதிப்படைந்த நெற்பயிர்கள் விவரங்கள் குறித்தும் கேட்டு அறிந்தார். இதற்கு விவசாயிகள், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொண்டு வந்தால் உடனுக்குடன் கொள்முதல் செய்யாமல் தாமதப்படுத்துகின்றனர். இதனால் பல நாட்களாக கொள்முதல் நிலையங்களில் நெல்களை கொட்டி வைத்து காத்துள்ளோம் . இதனால் நெல்கள் நனைந்து முளைத்து வருகிறது. மேலும் லாரிகள் பிரச்சனையால் நெல்கள் உடனுக்குடன் இயக்கமும் செய்யப்படுவதில்லை . இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து வருகிறோம். தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான மற்றும் இளம் நெற்பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்துள்ளன . இது குறித்து புகார் செய்தும் அதிகாரிகள் யாரும் பார்வையிட்டு ஆய்வு செய்யாமல் உள்ளனர். உடனுக்குடன் நெல்களை கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும் . மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இது தவிர மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகளை விவசாயிகள் கொட்டி வைத்து தொடர்ந்து காத்து கிடக்கின்றனர். தஞ்சை அருகே உள்ள காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த விவசாயிகளைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி , அங்கிருந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள் பலரும் நெல் கொள்முதல் தொடர்பாக அவரிடம் புகார் தெரிவித்தனர். பல விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைக்க ஆரம்பித்ததையும், கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதையும் கண்ணீர் மல்க கூறினர். 15 நாட்களாக நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் அலைக்கழித்து வருவதாகவும் குற்றச்சாட்டினர்.
இதையும் படிங்க: EPS சொல்றது சுத்தப் பொய்... விவசாயிகளுக்கு இதை செஞ்சிருக்கோம்... அமைச்சர் சக்கரபாணி விளக்கம்...!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தஞ்சை காட்டூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இன்று ஆய்வு செய்தேன். விவசாயிகள் என்னிடம் பல்வேறு கோரிக்கைகளை கண்ணீருடன் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தினமும் 2000 மூட்டைகள் கொள்முதல் செய்வதாக தமிழக அரசு அறிவித்து இருந்தது. ஆனால் நேரடியாக விவசாயிகளிடம் கேட்டபோது வெறும் 800 மூட்டைகள் தான் கொள்முதல் செய்வதாக தெரிவிக்கின்றனர். தமிழக அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது. தஞ்சை காட்டூர் கொள்முதல் நிலையத்தில் அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதலுக்காக விவசாயிகள் கொண்டுவந்து 15 நாட்களாக காத்துக் கிடக்கின்றனர். மேலும் கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைக்க போதிய இடவசதி இல்லை. லாரிகள் பிரச்சனை, கொள்முதல் தாமதத்தால் நெல்கள் நனைந்து முளைத்து வீணாகி வருகிறது. எனவே விவசாயிகளுக்கு இந்த தீபாவளி கண்ணீர் தீபாவளியாக தான் உள்ளது.
இந்த ஆய்வின்போது முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், தஞ்சை மத்திய மாவட்ட அ.தி.மு.க செயலாளர் சேகர் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஒருத்தநாடு அருகே உள்ள மூர்த்தியம்மாள்புரம் , திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்தார்.
இதையும் படிங்க: நெல் மூட்டைகள் தேங்கி கெடக்குதுய்யா... EPS- யிடம் வேதனையைக் கொட்டி தீர்த்த விவசாயிகள்...!