அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநிலச் செயலாளருமான ஐ.எஸ். இன்பதுரை, இன்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களைச் சந்தித்து முக்கிய மனு ஒன்றை அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுக அரசு தேர்தல் நடத்தை விதிகளைப் (MCC) புறக்கணித்து அரசு இயந்திரத்தைத் தனது தேர்தல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தி வருவதாகக் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது இன்பதுரை நேரடிக் குற்றச்சாட்டை வைத்தார். முதலமைச்சர் ஸ்டாலின் பின்னால் ஒரு இன்னோவா கார் செல்கிறது. அது அரசுக்குச் சொந்தமான வாகனம். அதில் அரசு அதிகாரிகள் பயணித்து வருகிறார்கள். தேர்தல் பிரசாரத்தின் போது அரசு வாகனங்களையோ அல்லது அரசு அதிகாரிகளையோ பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு முற்றிலும் எதிரானது எனச் சுட்டிக்காட்டினார்.
தலைமைச் செயலகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR) கருவிகளைப் பயன்படுத்தி ஆளும் கட்சியினர் தேர்தல் செய்திகளைப் பரப்பி வருவதாக அவர் குற்றம் சாட்டினார். அரசு அதிகாரிகள் முதலமைச்சருக்குத் தேர்தல் பணிகளைச் செய்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் ஆளும் கட்சிக்குத் துணையாகச் சென்றால், அந்தத் தேர்தலையே செல்லாது என அறிவிக்க முடியும். வரம்பு மீறிச் செயல்படும் அரசு அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திடம் அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: நாளை அதிமுக ஆர்ப்பாட்டம் உறுதி! தேர்தல் ஆணையத்துடன் இன்பதுரை சந்திப்பு...! 'சுவிதா' ஆப் சிக்கலுக்குத் தீர்வு!

திமுகவினர் எடப்பாடி பழனிசாமி மீது சுமத்தும் புகார்களுக்குப் பதிலளித்த இன்பதுரை எடப்பாடி பழனிசாமி பெண்களின் மாண்புக்கு எதிராகப் பேசினார் என கனிமொழி சோமு சொல்கிறார். ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடியின் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாகப் பேசியபோது இவர்கள் எங்கே சென்றார்கள்? பெண்களின் மாண்பைப் பற்றிப் பேசுவதற்கு திமுகவிற்கு எந்த அருகதையும் கிடையாது எனச் சாடினார்.
கொடநாடு வழக்கில் அதிமுகவினர் சிறைக்குச் செல்வார்கள் எனக் கூறப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர் கொடநாடு வழக்கை இன்னும் எத்தனை நாட்களுக்குப் பூச்சாண்டியாகக் காட்டப் போகிறீர்கள்? அந்த வழக்கில் உள்ளே சென்றவர்களை வெளியில் எடுத்ததே திமுக வழக்கறிஞர்கள்தான் எனப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் அதிமுகவின் இந்தப் புகார்களைக் கவனித்து, தவறு செய்யும் அதிகாரிகள் மற்றும் அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஆளும் கட்சி மீது உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக இன்பதுரை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓ.பி.எஸ் ஒரு துரோகி, திமுகவின் பி டீம்! காஞ்சிபுரம் பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தாக்கு!