நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 'ஹர் கர் திரங்கா' (அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி) பிரச்சாரத்தின் கீழ் நடைபெற்ற மாபெரும் தேசியக் கொடி பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின் போது மேடையில் பாஜக நிர்வாகிகள் கொடுத்த கட்சி/காவி கொடியை வாங்க மறுத்து, தேசியக் கொடியைக் கேட்டுப் பெற்றுப் பேரணியைத் தொடங்கி வைத்த சம்பவம் மேடையில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி ராஜீவ்காந்தி சிக்னல் அருகே பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'ஹர் கர் திரங்கா' தேசியக் கொடி யாத்திரையில் மத்திய அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார். புதுச்சேரியில் உள்ள அனைத்து வீடுகளிலும் மூவர்ணத் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த பேரணி நடைபெற்றது.
விழா மேடையில் அமித் ஷா தயாராக நின்றிருந்த போது, அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் சிலர் அவருக்குக் காவிக் கொடியைக் கொடுத்துப் பேரணியைத் தொடங்கி வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பாராட்டு! நாடாளுமன்ற குழு தலைவர் முகுல் வாஸ்னிக் எம்பி நெகிழ்ச்சி கடிதம்!

உடனடியாக அதனைக் கவனத்தில் கொண்ட அமித் ஷா, "இது நாட்டின் தேசியக் கொடி ஊர்வலம்; இங்கு காவிக் கொடி வேண்டாம், தேசியக் கொடியைத் தான் தர வேண்டும்" என்று நிர்வாகிகளிடம் கடிந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து நிர்வாகிகள் அவசர அவசரமாக மூவர்ணத் தேசியக் கொடியை அவரிடம் வழங்கினர். அந்தத் தேசியக் கொடியை அசைத்து 'ஹர் கர் திரங்கா' யாத்திரையை அமித் ஷா முறைப்படி தொடங்கி வைத்தார்.
நிர்வாகிகளின் சுதாரிப்பின்மையால் மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டாலும், தேசியக் கொடிக்கு முன்னுரிமை அளித்து அமித் ஷா செயல்பட்ட விதம் அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றது.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக மீது ரங்கசாமி அதிருப்தியா..?? 9 நாட்களாக நீளும் இலாகா இழுபறி!