புதுச்சேரிக்கு ஆய்விற்காக வந்து சென்ற நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு வழங்கப்பட்ட சிறப்பான வரவேற்பு மற்றும் தாராள உபசரிப்பைப் பாராட்டி, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான முகுல் வாஸ்னிக் நெகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுச் சான்றிதழ் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழு அண்மையில் புதுச்சேரிக்கு அரசு சார்ந்த பல்வேறு ஆய்வுகளுக்காக வருகை தந்தது. இந்த ஆய்வின் போது புதுச்சேரி மாநில அரசின் சார்பில் குழு உறுப்பினர்களுக்கு மிகச் சிறந்த ஒத்துழைப்பும், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பும் இரவு விருந்தும் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமிக்கு நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் முகுல் வாஸ்னிக் எம்பி அனுப்பியுள்ள அந்த அதிகாரப்பூர்வக் கடிதத்தில், கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும், புதுச்சேரிக்கான எங்கள் ஆய்வின்போது தாங்கள் குழுவிற்கு அளித்த சிறப்பான வரவேற்பு மற்றும் இரவு விருந்துக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் பாஜக மீது ரங்கசாமி அதிருப்தியா..?? 9 நாட்களாக நீளும் இலாகா இழுபறி!
தங்களின் அன்பான உபசரிப்பும் தனிப்பட்ட கனிவான அணுகுமுறையும் அந்த மாலையை மறக்க முடியாததாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றின. இது உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் இயல்பான சூழலில் உரையாடுவதற்கும், புதுச்சேரியின் தனித்துவமான கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் மரபுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும் ஒரு விலைமதிப்பற்ற வாய்ப்பை வழங்கியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்குறிப்பில், இக்குழுவின் வருகையின்போது புதுச்சேரி அரசு வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தன; அவை குழுவின் ஆலோசனைகளுக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும். தங்களின் தாராளமான உபசரிப்பிற்கு மீண்டும் ஒருமுறை எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். புதுச்சேரி மக்களுக்கான தங்கள் சேவையில் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் தொடர்ச்சியான வெற்றியுடனும் திகழ வாழ்த்துகிறோம் என நெகிழ்ச்சியுடன் வாழ்த்தித் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மேகதாது 2026-ல்தான் வந்ததா..? வயிற்றெரிச்சல்தான்..! திமுகவை வெளுத்து வாங்கிய த.வெ.க.!