தொகுதி மறுவரையறை மசோதா விவாதத்தின் மீது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவைத் தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையாது என விளக்கமளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதா 2026-ஐ மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். இதேபோல யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026-ஐ மத்திய அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார். இதில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தொகுதி மறுவரையறை நடவடிக்கையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தைப் புள்ளிவிவரங்களுடன் மறுத்துப் பேசினார்.
ஐந்து தென்மாநிலங்களில் தற்போது 129 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 195 ஆக உயரும். அதாவது சதவிகித அடிப்படையில் 23.76இல் இருந்து 23.97%ஆக உயரும். தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். கேரளாவில் 20 தொகுதிகளில் இருந்து 30 தொகுதிகளாகவும், ஆந்திராவில் 25 தொகுதிகளில் இருந்து 38 தொகுதிகளாகவும், தெலங்கானாவில் 17 தொகுதிகளில் இருந்து 26 தொகுதிகளாகவும், கர்நாடகாவில் 28 தொகுதிகளில் இருந்து 42 தொகுதிகளாகவும் அதிகரிக்கும் எனக்கூறினார்.
இதையும் படிங்க: ”அமித் ஷாவுக்கு என்ன நெஞ்சழுத்தம், மண்டை செருக்கு”... வார்த்தையை விட்ட உள்துறை அமைச்சருக்கு வைகோ பதிலடி...!
தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்ட அவையில், தமிழகத்தின் 39 எம்பிக்களின் பங்கு 7.18% ஆகும். புதிய சட்டத் திருத்தத்தின்படி அவையின் பலம் அதிகரிக்கும்போது, தமிழகத்தின் இடங்கள் 59-ஆக உயரும். அப்போது, மொத்த அவையில் தமிழகத்தின் பங்கு 7.23% ஆக இருக்கும். இதன் மூலம் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைவதற்குப் பதில் அதிகரிக்கவே செய்கிறது என்று அவர் விளக்கினார்.
மேலும் 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தொகுதி மறுவரையறை அமலுக்கு வராது என்றும் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இவர்களுக்கு உதவித்தொகை ரூ. 6000 லிருந்து ரூ 8000 ஆக உயர்வு... புதுச்சேரியில் அமித் ஷா அதிரடி அறிவிப்பு...!