சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தில் 53-ம் ஆண்டு பெருவிழா இன்று (ஆகஸ்ட் 29) கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. இந்த ஆண்டு திருவிழா, ஆலயத்தின் பங்குத் தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. மாலை 6 மணியளவில் திருக்கொடி புனிதப்படுத்தப்பட்டு, ஆலய வளாகத்தில் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டு, கொடிக்கம்பத்தில் ஏற்றப்பட்டது. 75 அடி உயர கொடிக் கம்பத்தில், 12 அடி நீளம் கொண்ட அன்னையின் உருவம் பொறித்த திருக்கொடியை பங்குத் தந்தை ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றினார்.

இதனைத் தொடர்ந்து கூட்டுத் திருப்பலி கோலாகலமாக நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'மரியே வாழ்க' என முழக்கமிட்டனர். இந்த திருவிழா, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்காக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறைகள், மற்றும் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிசிடிவி கேமராக்கள் மற்றும் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் வழக்கு.. 2026 ஜனவரிக்கு ஒத்திவைப்பு..!!
விழாவை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி ஆலய வளாகத்தில் நடைபெற இருக்கிறது. அதன்படி, நாளை (சனிக்கிழமை) 'திருப்பயணம்' என்ற தலைப்பில் மாலை 5 மணிக்கு சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா தலைமையில் கூட்டுத்திருப்பலி நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு 'புனித கதவு' என்ற தலைப்பில் நற்கருணை பவனி ஆராதனை சேலம் மறைமாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் தலைமையில் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான புனித ஆரோக்கிய மாதாவின் பெரிய தேர் பவனி செப்டம்பர் 7-ம் தேதி மாலை நடைபெறவுள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு, உலக மக்கள் ஒற்றுமையுடன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்பது விழாவின் முக்கிய பிரார்த்தனையாக உள்ளது.

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயம், ‘குட்டி வேளாங்கண்ணி’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, கடற்கரை சாலை மற்றும் அடையார் பகுதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் பாதயாத்திரையாக வருவதால், பொதுமக்கள் மாற்று வழிகளைப் பயன்படுத்த காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஜப்பானில் பிரதமர் மோடி.. முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது..!!