தமிழ்நாட்டின் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள், நிறுவனங்கள் மற்றும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா’ வரும் 25ஆம் தேதி நடைபெறவுள்ளது. நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் உள்ளிட்ட 7 திட்டங்களை உள்ளடக்கி இந்த சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அரசு செய்தி தொடர்பாளர் அமுதா ஐ.ஏ.எஸ்., இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்து இதுகுறித்த விவரங்களை வெளியிட்டார். “இந்த விழா, தமிழ்நாட்டின் கல்வி முன்னேற்றத்தை மேலும் உயர்த்தும் ஒரு மைல்கல்லாக அமையும். சிறந்த பங்களிப்பு கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 1 லட்சம் கோடி! காங்., செய்ததை விட 16 மடங்கு அதிகம்! அருணாச்சலுக்கு அள்ளிக் கொடுத்த மோடி!
இந்த ஆண்டின் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்றும், இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொள்கிறார் என்று அமுதா ஐ.ஏ.எஸ். கூறினார். நிகழ்ச்சியில் தமிழக அரசு கல்வித் துறையில் எடுத்து வரும் முன்னேற்றங்களும், மாணவர்களுக்கு பயனளிக்கும் திட்டங்களும் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 14.60 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் 5.29 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். தமிழ்ப்புதல்வன் திட்டத்தில் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பு விகிதத்தில் முன்னணியில் உள்ளது. இந்த விழா, அந்த சாதனையை மேலும் வலுப்படுத்தும். குறிப்பாக, பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதன் மூலம், கல்வியின் தரத்தை உயர்த்தலாம்” என்று வலியுறுத்தினார்.

இந்த விழாவை கல்வித்துறை அமைச்சகம் முழுமையாக ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள் மற்றும் கல்வியாளர்கள் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு அமுதா அழைப்பு விடுத்தார். இந்த விழா, தமிழ்நாட்டின் கல்வி கொள்கையை வலுப்படுத்துவதோடு, இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்கும். தமிழ்நாடு அரசின் ‘கல்வி முன்னேற்றத் திட்டம்’ இன் ஒரு பகுதியாக இது அமைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் முழுமையடைந்துள்ளன.
இதையும் படிங்க: அரசு பள்ளியில் அரங்கேறிய பகீர் சம்பவம்... ஆசிரியை திட்டியதால் 3 மாணவிகள் எடுத்த விபரீத முடிவு..!