புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (ஜே.சி.எம்.) திடீர் நுழைவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் அவர் 'லட்சிய ஜனநாயக கட்சி' (LJK) என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே தொகுதி தோறும் 'ஜே.சி.எம். மன்றங்கள்' அமைத்து நலத்திட்டங்கள் வழங்கினார்.
காமராஜ் நகர், முதலியார்பேட்டை, பாகூர் போன்ற தொகுதிகளில் தினசரி உணவு வழங்கல், குடிநீர், சாலை பிரச்னைகளுக்காக போராட்டங்கள் நடத்தினார். மாநில அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். மூன்று சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
வரும் 2026 சட்டசபை தேர்தலில் புதுச்சேரியின் 30 தொகுதிகளில் பாஜக போட்டியிடாத 15 தொகுதிகளில் தனித்து களமிறங்க திட்டமிட்டிருந்தார். இவரது செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இதையும் படிங்க: காங்., தலைமையில் கூட்டணி!! திமுகவுக்கு அதிர்ச்சி! யார் பெரிய கட்சி?! புதுச்சேரியில் கூட்டணிக்குள் சலசலப்பு!
ஆனால், பொங்கலுக்கு முன் அவசரமாக தந்தையுடன் டெல்லி சென்ற ஜோஸ் சார்லஸ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். புதுச்சேரி திரும்பிய பிறகு திடீரென சட்டசபைக்கு சென்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இதன்பின் அரசு விமர்சனத்தை நிறுத்தியுள்ளார். தற்போது தேர்தலில் பாஜக கூட்டணியில் லட்சிய ஜனநாயக கட்சி 2 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மார்ச் 1-ம் தேதி புதுச்சேரியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்களில் ஒருவராக ஜோஸ் சார்லஸ் மேடையேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திருப்பம் புதுச்சேரி அரசியலை சூடுபிடிக்கச் செய்துள்ளது. லாட்டரி பின்னணி கொண்ட ஜோஸ் சார்லஸ், மக்கள் நலத்திட்டங்கள் மூலம் ஆதரவு பெற்று, அரசியல் களத்தில் வலுவான இடத்தை பிடித்தார். ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது எதிர்பாராத மாற்றமாக உள்ளது.
இது 2026 தேர்தலில் வாக்கு பங்கீட்டை பெரிதும் பாதிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. புதுச்சேரி மக்கள் இந்த மாற்றத்தை எப்படி பார்க்கின்றனர் என்பது காலம் தான் சொல்லும்.
இதையும் படிங்க: த.வெ.க. புதுச்சேரியில் போட்டியிடுமா? விசில் சின்னம் கிடையாதா? விஜய் ப்ளானில் புது ட்விஸ்ட்!