சென்னை: மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகம் (TVK) சார்பில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் தொடர்பாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. பட்டியலில் பிற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழக பாஜக செயலாளர் கராத்தே தியாகராஜன், தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரசாரம் செய்வதற்காக TVK சார்பில் 40 பேர் கொண்ட நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அந்தப் பட்டியலில் TVK தலைவர் மற்றும் முதல்-அமைச்சர் விஜய்யுடன், காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட பிற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தவெகவிடம் ஏன் இந்த கள்ளத்தனம்? ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு எம்பி சுப்பராயன் கேள்வி!

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 77 தொடர்பான விதிகளை மேற்கோள் காட்டியுள்ள பாஜக, ஒரு அரசியல் கட்சியின் சார்பில் நட்சத்திர பேச்சாளர்களாக அந்தக் கட்சியால் நியமிக்கப்படும் தலைவர்களின் பட்டியலே பயன்படுத்தப்பட வேண்டும் என வாதிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது குறித்து விளக்கம் தேவை எனவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முன்பு எடுத்த நடவடிக்கைகளையும் பாஜக தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது. TVK-வுக்காக அங்கீகரிக்கப்பட்டதாக கூறப்படும் நட்சத்திர பேச்சாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே புகாரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இதனிடையே, தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ நடைமுறைகளின்படி, நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றன. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் சட்ட விதிகளை கடைபிடித்து நட்சத்திர பேச்சாளர்களின் பிரசாரம் கண்காணிக்கப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த புகார் அரசியல் களத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் புகார் தொடர்பாக தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக டெபாசிட் இழக்கும்..! இன்ஸ்டாவை வைத்தே அவங்கள முடிச்சிட்டோம்..! அமைச்சர் ஆதவ் பேச்சு..!!