தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பெற்றுள்ள அபார வெற்றி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் கடந்த 4 மாத கால நல்லாட்சிக்காக மக்கள் அளித்த மகத்தான வெற்றி என்று தமிழக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தவெக வேட்பாளர்கள் தொடர் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், நடந்து முடிந்த இடைத்தேர்தல் வெற்றி என்பது தமிழக வெற்றிக் கழக அரசின் 4 மாத கால வெளிப்படையான, நேர்மையான நல்லாட்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். தமிழகத்தின் உண்மையான மாற்றத்திற்கான அரசாக தவெக அரசு தொடர்ந்து செயல்படும் என்பதை இந்த இடைத்தேர்தல் முடிவுகள் மிக ஆழமாக நிரூபித்துள்ளன என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மதுராந்தகத்தில் தவெக புதிய பார்முலா! 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும் என அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு!

தேர்தல் பிரச்சாரக் களத்தில் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த அவர், இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அதிமுகவையோ, அல்லது அதிமுக திமுகவையோ ஒருபோதும் உண்மையாக விமர்சித்திருக்க மாட்டார்கள்; இரு கட்சிகளும் கள்ளக்கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டன. மு.க.ஸ்டாலினையும் உதயநிதி ஸ்டாலினையும் மீண்டும் எப்படியாவது ஆட்சியில் உட்கார வைப்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி உள்ளுக்குள் மறைமுகமாக வேலை செய்து வருகிறார் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும் எடப்பாடி பழனிசாமியின் தலைமையைக் கடுமையாகச் சாடிய அமைச்சர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோர் கட்டிக்காத்த வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை, இன்று வெறும் ஒரு லெட்டர் பேட் கம்பெனி போன்று எடப்பாடி பழனிசாமி மாற்றி வைத்துள்ளார்; மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு அதலபாதாளத்திற்குச் சென்றுவிட்டது என்று சாடினார்.
தமிழகத்தில் இனி மக்கள் நலனுக்கான தவெகவின் நல்லாட்சியே தொடர்ந்து கோலோச்சும் என்றும், எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலைத் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளர்கள் முழுமையாகப் புறந்தள்ளி தவெகவிற்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனர் என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் முன்னிலை: தவெக அரசுக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்! அமைச்சர் விஸ்வநாதன் பேட்டி!