தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் இன்று நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.
தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வருகை தந்ததைத் தொடர்ந்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற மையக்குழு கூட்டம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் கூட்டணிக் கணக்குகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்ட இந்தக் கூட்டத்திற்குப் பின், பாஜக மகளிரணித் தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இன்று காலை நடைபெற்ற முதற்கட்டக் கூட்டத்தில் தமிழக அரசியலின் தற்போதைய நகர்வுகள் குறித்து ஆலோசித்தோம். இன்று பிற்பகல் நடைபெறும் கூட்டத்தில், எந்தெந்த தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிடுவது அல்லது கூட்டணியில் எந்தெந்த இடங்களைக் கேட்பது என்பது குறித்து ஒரு இறுதி முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.
வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "எந்தெந்த தொகுதிகளில் நாம் வலுவாக இருக்கிறோம் என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், இறுதி முடிவைக் கட்சியின் அகில இந்தியத் தலைமை மட்டுமே எடுக்கும்" எனத் தெளிவாகத் தெரிவித்தார். இதற்கிடையில், பாஜகவை விமர்சித்து வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்தார். "விஜய் குறித்து நான் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால், திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு திமுக போன்ற ஒரு பெரிய கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், அதற்கு அவர் ஒருவரால் மட்டுமே முடியுமா என்பதை அவர் யோசிக்க வேண்டும்" எனத் தனது அரசியல் வியூகத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: "அதிமுக - திமுக ரகசியக் கூட்டணி?" அதிமுகவின் முகத்திரையை கிழித்த தவெக நிர்மல்குமார்!!
தற்போதைய ஆளுங்கட்சியை வீழ்த்த வேண்டுமானால் பலமான கூட்டணி அவசியம் என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், தேசிய ஜனநாயகக் கூட்டணி வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தேசியக் கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான வேலைகளில் பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருவதை அவரது பேச்சு உணர்த்தியது. வானதியின் இந்த பேச்சு, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் பிற கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக-வுடன் கூட்டணியா? "விஜய் பேசுவது யாரோ தூண்டப்பட்ட பேச்சு" - திருமாவளவன் விமர்சனம்