விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள மல்லாங்கிணறு அயன் ரெட்டியப்பட்டி கிராமத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவின் தாயார் புஷ்பம் ரத்தினசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு மறைந்த புஷ்பம் ரத்தினசாமி அவர்களின் உருவப்படத்தைத் திறந்து வைத்து மரியாதை செலுத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
அப்போது திருப்பரங்குன்றம் தீப விவகாரம் குறித்துப் பேசிய அவர், "திருப்பரங்குன்றத்தில் மத அடிப்படையிலான பிரச்சனையை முன்னிறுத்தி இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே மோதலை உருவாக்கச் சங்பரிவார் அமைப்புகள் முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான அரசியல். வட இந்தியாவில் பதட்டத்தை ஏற்படுத்தப் பயன்படுத்திய அதே யுக்திகளை மதுரையில் சனாதன அரசியலை மையப்படுத்தப் பயன்படுத்துகிறார்கள். இதனை எதிர்த்து நாளை மதுரை பழங்காநத்தம் பகுதியில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது" என்று தெரிவித்தார். தன்னை விமர்சித்த அண்ணாமலைக்கு பதிலளித்த அவர், மத நல்லிணக்கத்தை விரும்பும் மண்ணின் மைந்தன் என்பதே திருப்பரங்குன்றம் பற்றிப் பேச தனக்கு இருக்கும் தகுதி என்றார்.
மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டப் பெயர் மாற்றம் குறித்தும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார். மகாத்மா காந்தியின் பெயரில் இருந்த திட்டத்தை ‘ஜி. ராம்ஜி’ என வடமொழி பெயருக்கு மாற்றியிருப்பது காந்தியடிகளைச் சிறுமைப்படுத்தும் செயல் என்றும், இதனை எதிர்த்து வரும் 24-ஆம் தேதி திமுக தலைமையில் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கப் போவதாகவும் அவர் அறிவித்தார். மேலும், வாக்காளர் பட்டியலில் (SIR) லட்சக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதில் உள்நோக்கம் இருப்பதாகவும், மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்த நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் 'தவெக' கூட்டணி கனவு கலைந்ததா? ரங்கசாமியை சந்தித்த பாஜக தேசியத் தலைவர்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த திருமாவளவன், "விஜய் திமுகவைத் தீய சக்தி என்று கூறுவது அவர் சொந்தமாகச் சொல்வது போலத் தெரியவில்லை. யாரோ ஒருவரால் தூண்டப்பட்ட பேச்சாகவே அவரது உரை முழுவதும் திமுக வெறுப்பு மட்டுமே உள்ளது. அவர் சுயமாகச் சிந்தித்துப் பேசினால் அவருக்கு நல்லது" என்று குறிப்பிட்டார். இறுதியில், "விஜயும் பெரியார் கொள்கையைப் பின்பற்றுகிறார், எதிர்காலத்தில் அவருடன் கூட்டணி வைப்பீர்களா?" என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திருமாவளவன் எவ்வித பதிலும் கூறாமல் புன்னகையுடன் கைகூப்பிக் கும்பிட்டபடியே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்துப் பேசிய அவர், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை முதல்வர் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரக் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 2026 தேர்தலில் மக்களின் பேராதரவோடு திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக-வில் இணைந்தார் ஃபெலிக்ஸ் ஜெரால்ட்: விஜய்யின் தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம்!