சென்னை சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பில் மிக முக்கியப் பங்காற்றி வந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (CISF) மூன்று மோப்ப நாய்கள் இன்று தங்களது 8 ஆண்டுகாலச் சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றன. மீனம்பாக்கத்தில் உள்ள சி.ஐ.எஸ்.எப் வளாகத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில், அவற்றுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுச் சிறப்பான முறையில் வழிஅனுப்பி வைக்கப்பட்டன.
வெடிகுண்டு பரிசோதனை, போதைப்பொருள் கண்டறிதல் மற்றும் வி.ஐ.பி பாதுகாப்பு எனப் பல்வேறு சவாலானப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஆஷா, ஸ்வீட்டி, மேக்ஸ் ஆகிய மூன்று ஸ்நைப்பர் நாய்களும் இன்று அதிகாரப்பூர்வமாகப் பணி ஓய்வு பெற்றன. இவற்றுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி பொன்னி ஐ.பி.எஸ் மற்றும் விமான நிலைய இயக்குனர் ராஜாகிஷோர் ஆகியோர் மாலை அணிவித்து, பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிக் கௌரவித்தனர்.

ஓய்வு பெற்ற நாய்களுக்கு ஈடாக, தற்போது கேண்டி (பெண் நாய்), பேந்தர் மற்றும் ரஸ்டி (ஆண் நாய்கள்) ஆகிய மூன்று புதிய பயிற்சி பெற்ற ஸ்நைப்பர் நாய்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான பிரத்யேக பெல்ட்கள் மற்றும் உபகரணங்கள் அதிகாரிகளால் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: மதுரை டூ சென்னை... 17 வயது சிறுவனின் உடல் உறுப்பு தானம்! துரிதமாக செயல்பட்ட சென்னை மெட்ரோ!
பணியில் சேர்ந்த கையோடு, இந்தப் புதிய நாய்கள் தங்களது மோப்ப சக்தியால் வெடிமருந்துகளைக் கண்டறிவது, அதிகாரிகளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவது மற்றும் அறிமுகமில்லாத நபர்கள் கொடுக்கும் உணவைத் தவிர்ப்பது போன்ற அடிப்படைத் திறன்களைச் செய்து காட்டி அங்கிருந்தோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
விழாவின் இறுதியில், ஓய்வு பெற்ற மோப்ப நாய்களுக்கு சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதை (Guard of Honour) அளித்தனர். வீரர்கள் மலர் தூவி அந்த நாய்களை வழிஅனுப்பி வைத்தக் காட்சி அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 9 ஸ்நைப்பர் நாய்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது புதிதாகச் சேர்ந்துள்ள இந்த மூன்று நாய்களும் இனி வரும் நாட்களில் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இதையும் படிங்க: "பத்து தோல்வி பழனிச்சாமி... மொத்த தோல்வி மோடி!" சென்னை 'Loading 2.0' மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!