கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தமிழக அரசு ஜூலை 28 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் முறையிட்டதை அடுத்து, 15 நாட்களுக்கு தமிழகத்துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. இதை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்தது.
கர்நாடகாவின் கோரிக்கையை நிராகரித்த காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு 3,500 கனஅடி நீரை திறந்துவிடுமாறு உத்தரவிட்டது. ஆனால் தண்ணீர் திறக்க கர்நாடக மறுப்பு தெரிவித்தது. காவிரி பங்கீட்டு விவகாரத்தில் தமிழகம் - கர்நாடகா இடையே மோதல் முற்றி வந்தது .கர்நாடகாவின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக அணை நிரம்பி வழிவதால், கபினியில் அதிக நீர் திறந்துவிடப்பட்ட நிலை ஏற்பட்டது. அப்படி திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று காவிரி ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்து வந்தது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை இன்று காலை வந்தடைந்துள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணை தனது முழு கொள்ளளவை எட்டிய நிலையில், பாதுகாப்பு கருதி கடந்த 1-ஆம் தேதி முதல் வினாடிக்கு 25,000 கனஅடி வீதம் உபரி நீர் திறந்துவிடப்பட்டது.
இதையும் படிங்க: முழு கொள்ளளவை எட்டியது கபினி அணை... தமிழகத்தை நோக்கி 27 ஆயிரம் கனஅடி காவிரி நீர் திறப்பு!
அவ்வாறு திறந்துவிடப்பட்ட நீர், காவிரி ஆற்றின் வழியாக தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு இன்று காலை வந்து சேர்ந்தது. வழக்கமாக கபினி அணையிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீர், சுமார் 24 மணி நேரத்தில் பிலிகுண்டுலுவை வந்தடையும். ஆனால், கடந்த பல மாதங்களாக காவிரி ஆறு வறண்ட நிலையில் இருந்ததால், ஆற்றுப்படுகையில் இருந்த மணல் அதிகளவு நீரை உறிஞ்சிக் கொண்டதுடன், பள்ளங்களும் நிரம்பியதால், இந்த முறை மூன்று நாட்கள் தாமதமாக நீர் வந்தடைந்துள்ளது.
இன்று காலை 5 மணி நிலவரப்படி, பிலிகுண்டுலுவில் நீர்வரத்து வினாடிக்கு 1,000 கனஅடியாக பதிவாகியது. பின்னர் படிப்படியாக அதிகரித்து, காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 14,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்கும் என மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், இந்த உபரி நீர் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டல்லடிக்கும் ஆடிப்பெருக்கு... ஓடை போல் காட்சியளிக்கும் காவேரி... கலங்கும் மக்கள்...!