தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துகளைத் தொடர்ந்து அரசியல் சர்ச்சை தீவிரமடைந்துள்ளது. நடிகை த்ரிஷாவை குறிக்கும் வகையில் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், தமிழக வெற்றி கழக (தவெக) மகளிர் அணியினர் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் புகாரின் அடிப்படையில், உதயநிதி ஸ்டாலின் மீது பெண்களுக்கு எதிரான அவதூறு மற்றும் பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலான குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் உதயநிதி கைது செய்யப்பட்டதாக பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்த தகவல்கள் குறித்து காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. எனவே, கைது தொடர்பான தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதையும் படிங்க: திமுக துணைப் பொதுச்செயலாளர் பதவி! அப்பாவு முன்னிலை?! அப்செட்டில் அனிதா ராதாகிருஷ்ணன்! கனிமொழி-உதயநிதி முடிவு?
இந்த சர்ச்சையின் எதிரொலியாக சென்னை பாரிமுனையில் தவெக மகளிர் அணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். "ஆபாச நிதியே அரசியலை விட்டு விலகு" என்ற வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியபடி, உதயநிதி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான கருத்துகளை எந்த அரசியல் தலைவரும் பேசக்கூடாது என்றும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வலியுறுத்தினர்.
உதயநிதி பேச்சை மையமாகக் கொண்டு திமுக மற்றும் தவெக இடையேயான அரசியல் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த விவகாரம் அடுத்தகட்டமாக சட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் என்ன திருப்பம் எடுக்கப் போகிறது என்பது குறித்து பரபரப்பான எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: உதயநிதி ஸ்டாலினை டார்கெட் செய்யும் தவெக!! கர்நாடகா, காவிரி போராட்டம் திசைமாற்ற முயற்சியா?!