திருவள்ளூரில் பாதாள சாக்கடை பள்ளம் தோண்டியபோது, 10 அடி பள்ளத்தில் மண் சரிவு ஏற்பட்டு கூலித் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லாமல் பணிகள் நடைபெற்றதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். வீட்டின் உரிமையாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு, முறையான அனுமதி இல்லாமல் பணிகள் நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் கிராமத்தெரு பகுதியில் பாதாள சாக்கடைத் தொட்டி அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. சுமார் 10 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டி கூலித் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பூமி என்ற கூலித் தொழிலாளி உள்ளிட்ட நான்கு பேர் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது பூமி 10 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இறங்கி மண்ணை அள்ளிக்கொண்டிருந்தபோது, மேலே இருந்த மண் சரிந்து பள்ளத்திற்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து மண் சரிந்து, பள்ளத்தில் பணிபுரிந்து வந்த பூமியின் மீது மண் முழுவதுமாக விழுந்துள்ளது. இதனால் வெளியே இருந்த ஊழியர்களால் உடனடியாக மண்ணை அள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பூமியின் உடல் முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.
இதையும் படிங்க: ஓணம் வந்தல்லோ!! விமான டிக்கெட் விர்ர்ர்ர்!! ரெயில், பஸ் Full! பயணிகளுக்கு அதிர்ச்சி!
இந்த சம்பவம் அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றதால், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அருகில் யாரும் இல்லாததாலும், ஆள் நடமாட்டம் இல்லாததாலும் பொதுமக்கள் யாரும் உடனடியாக உதவிக்கு வரவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தீயணைப்புத்துறையினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மூச்சுவிட முடியாமல் பூமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சுமார் இரண்டரை மணி நேரம் போராடி, 10 அடி பள்ளத்தில் இருந்து மண்ணை அகற்றி, தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் பூமியின் உடலை மீட்டனர்.
கிராமத்தெரு பகுதியில் உள்ள நான்கு வீடுகளுக்காக இந்த கழிவுநீர் தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்றதாகவும், முறையான அனுமதி பெறாமல் இந்தப் பணிகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பணத்தைப் பெற்றுக்கொண்டு குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தின் திருவள்ளூர் அதிகாரிகள் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் இந்தப் பணிகளை ஊழியர்களிடம் ஒப்படைக்காமல், கூலித் தொழிலாளர்களை வைத்து மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உடலை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்த கூலித் தொழிலாளர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட முறையில் அங்குள்ள சில வீடுகளுக்காக பாதாள சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டப்பட்டதாகவும், இதற்கு எந்தவிதமான அனுமதியும் பெறாமல் பணிகள் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
கூலித் தொழிலாளியின் உயிரிழப்புக்குக் காரணமாகக் கருதப்படும் கூலித் தொழிலாளியை அழைத்து வந்த மேஸ்திரி, உதவிப் பொறியாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்: திரையுலகினர் ஆழ்ந்த இரங்கல்!