வீட்டு வாசலில் அமர்ந்திருந்த பெண்ணை பாபிலா என்ற இளைஞர் கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. மோகனா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த இளைஞர் தப்பியோடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண்ணை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்ற சம்பவத்தில், முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்ட அந்தப் பெண், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வடசென்னை கொருக்குப்பேட்டை சீனிவாசபுரம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் என்பவரின் மனைவி மோகனா, நேற்று இரவு தனது வீட்டின் வாசலில் மகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: சென்னை மெரினாவில் பரபரப்பு! மெட்ரோ ரயில் தற்காலிக கண்டெய்னர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஷாயின்ஷா என்ற பாபிலா என்ற இளைஞர், பிளாஸ்டிக் கேனில் பெட்ரோலைக் கொண்டு வந்து மோகனா மீது ஊற்றியுள்ளார். பின்னர், அவர் மீது தீ வைத்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இதை சற்றும் எதிர்பாராத மோகனா, வலியால் கதறியுள்ளார். அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு குடும்பத்தினரும், அக்கம் பக்கத்தினரும் அங்கு வந்து மோகனாவை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு மோகனாவுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உயர் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில், மோகனாவின் கணவர் மாணிக்கத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஷாயின்ஷா என்ற பாபிலாவிற்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டு கைகலப்பு நடந்ததாகவும், அந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதில் ஷாயின்ஷா சிறைக்குச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாணிக்கத்தைப் பழிவாங்கும் நோக்கத்தில் அவரது மனைவி மோகனா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்க முயன்றதாக மாணிக்கம் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூரச் செயலை செய்துவிட்டு தப்பியோடிய ஷாயின்ஷாவை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் ஷாயின்ஷா அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் மோகனாவிற்கும் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு இருந்ததாகவும், கடந்த சில மாதங்களாக தன்னுடன் இருந்த அந்த உறவை மோகனா முறித்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தான், மோகனாவைப் பழிவாங்கும் நோக்கத்தில் இந்தச் செயலில் ஈடுபட்டதாக அவர் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்ட ஷாயின்ஷாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டு வாசலில் தனது மகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பெண்ணின் மீது, ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்த பெட்ரோலை ஊற்றி, எந்தவித தயக்கமும் இன்றி தீ வைத்து, பின்னர் அங்கிருந்து இளைஞர் ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தீக்காயம் அடைந்த மோகனாவுக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் கொருக்குப்பேட்டை மற்றும் வண்ணாரப்பேட்டை பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் மீண்டும் ஒரு கோரம்... ஏசி வெடித்ததால் ஹோட்டல் முழுவதும் திகுதிகுவென பரவிய தீ... 9 பேர் உடல் கருகி பலி...!