திமுகவின் முப்பெரும் விழா இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. காய்ச்சல் காரணமாக முன்பு ஒத்திவைக்கப்பட்ட இந்த விழாவில் கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். விழாவில் பெரியார், அண்ணா, கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து ஸ்டாலின் தனது உரையில் ஆளுங்கட்சியின் ஆட்சிமுறையை கடுமையாக விமர்சித்தார். “ரீல்ஸ் வெறி பிடித்த ஆளுங்கட்சியினரால் நூற்றாண்டு புகழ்பெற்ற சட்டமன்றம் கூட தன் மாண்பை இழந்து நிற்கிறது” என்று குற்றம்சாட்டினார். சமீபத்திய சட்டசபைக் கூட்டத்தொடர் நேரலையில் ஒளிபரப்பப்பட்டதை சுட்டிக்காட்டி, முதலமைச்சரின் சிரிப்பைப் பார்க்க முடியவில்லை என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பெரிய திரை அமைக்கக் கோரியதை எடுத்துக்காட்டினார். இதுபோன்ற செயல்கள் நாட்டுக்குத் தேவையானவையா என கேள்வி எழுப்பினார்.
சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், மிசா கைது, சர்க்காரியா கமிஷன் போன்ற தொடர்பற்ற விவகாரங்களைக் கொண்டு அவதூறு பரப்பி திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார். “என் மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் தியாகத்திற்கு மார்க் போட எவருக்கும் தகுதி கிடையாது” என்று உறுதியாகக் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி அங்கீகாரம் பெயரில் கோடிகள் வசூலா..? அன்பில் மகேஷ் உதவியாளரிடம் விசாரணை..!! அரசியலில் பரபரப்பு..!!

அண்ணன் சிட்டிபாபுவின் சிறை நாட்குறிப்பும், எம்.ஜி.ஆர். அமைத்த இஸ்மாயில் கமிஷன் அறிக்கையும் ஆதாரமாக இருப்பதாகச் சுட்டிக்காட்டி, படிக்கத் தெரிந்தவர்கள் அவற்றைப் படிக்கட்டும் என்றார். கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததை சுட்டிக்காட்டி, “நல்ல வேளை தப்பிச்சேன். சட்டசபையில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்காமல் இருந்ததற்கு கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி” என இரு கரங்களையும் உயர்த்தி கும்பிட்டு நன்றி தெரிவித்தார்.
தொழில்முதலீடுகளை ஈர்க்க தொழில்துறை அமைச்சர் அல்லது செயலாளர் இல்லாமல் முதலமைச்சர் லண்டன் சென்றதை கேலிசெய்து, “இதுதான் முதலீடு ஈர்க்கும் லட்சணமா?” என வினவினார். மேலும், “திமுக தந்தது ரியல் ஆட்சி; இவர்கள் நடத்துவது ரீல்ஸ் ஆட்சி. தமிழக வெற்றிக்கழகம் என்பதற்குப் பதில் தமிழக ரீல்ஸ் கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம்” என கிண்டல் செய்தார்.
தமிழகத்தில் மின்வெட்டுக்கும் அரிவாள்வெட்டுக்கும்தான் போட்டி என்றும் குறிப்பிட்டார். வாக்குறுதிகளைக் கேட்டால் அவதூறு பேசி ரீல்ஸ் போடும் நிலையை விமர்சித்த ஸ்டாலின், மக்கள் ஏமாற மாட்டார்கள் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: நெருங்கியது இடைத் தேர்தல்... இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு..!! பரபரக்கும் அரசியல் களம்..!!