2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அதிரடியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் மற்றும் கூட்டணிக் குழப்பங்களை முறியடிப்பது குறித்து மிகத் தெளிவான உரையை நிகழ்த்தினார்.
"நமது தோழமைக் கட்சிகளில் நம்மைப் பிடிக்காத ஒருசிலர் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் தேவையில்லாத கருத்துகளைப் பேசி கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க நினைக்கலாம். அத்தகைய சூழ்ச்சிகளுக்கு நாம் யாரும் பலியாகிவிடக் கூடாது. கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவகாரங்களை நான் நேரிடையாகக் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் தேர்தல் பணிகளில் மட்டும் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும்" என்று நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். மேலும், "தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் நானே களம் காண்பதாகக் கருதி, உங்களின் நூறு சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும்" என அவர் உணர்ச்சி பொங்கக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: த.வெ.க. தேர்தல் பிரசாரக்குழு நாளை ஆலோசனை: 234 தொகுதிகளுக்கும் விஜய் புதிய வியூகம்!
மக்களிடம் செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய கண்ணியம் குறித்துப் பேசிய அவர், "மக்களிடம் குறைகளைச் கேட்கும்போது தப்பித்தவறி கூட கோபமோ, ஆணவமோ அல்லது அதிருப்தியோ காட்டக்கூடாது. 'நாம் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்' என்பதை மட்டுமே தாரக மந்திரமாகக் கொண்டு தேர்தல் பணியாற்றுங்கள்" என வலியுறுத்தினார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு திமுக நிர்வாகிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, உட்கட்சிப் பூசல்களைத் தவிர்த்து, மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும் என்ற அவரது கட்டளை, தேர்தல் களத்தில் திமுகவின் அடுத்தகட்ட நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்! 22-ல் அதிமுக - பாஜக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்து?