மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை ஒட்டி இன்று (ஜனவரி 25) “அன்றும் இன்றும் என்றும் இந்திக்குத் தமிழ் மண்ணில் இடமில்லை” என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக வலிமையான பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். இந்தித் திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் நடத்தி வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டங்களை நினைவு கூர்ந்து, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை ‘ஆரிய - திராவிடப் போர்க்களம்’ என அவர் வர்ணித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதியுள்ள முதல்வர், “இருமொழி கொள்கையே எங்கள் உயிர்மூச்சு; மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கப் பார்க்கும் மத்திய அரசின் அதிகாரத்துவ முயற்சிகளைத் தமிழகம் ஒருபோதும் ஏற்காது” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக் கொள்கையை (NEP) ஏற்காத காரணத்திற்காகத் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை (SSA Funds) மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதையும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: துணை மருத்துவ படிப்புகளுக்கும் நீட், "இந்த அநீதியை அனுமதிக்க முடியாது” - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழி சார்ந்த விஷயம் மட்டுமல்ல, அது தமிழ்ப் பண்பாட்டையும் அடையாளத்தையும் காக்கும் போர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், “2026 தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல; அது திராவிட இயக்கத்தின் லட்சியங்களைக் காப்பதற்கான களம். டெல்லிக்கு அடிபணிந்து தமிழ் கலாச்சாரத்தை அழிக்கத் துடிக்கும் சக்திகளை வீழ்த்தத் தொண்டர்கள் தயாராக வேண்டும்” என அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் குறித்த இதுவரை வெளிவராத அரசு ஆவணங்கள் அடங்கிய நூலை முதல்வர் வெளியிட்டார். “இந்தித் திணிப்பு என்பது செத்த குதிரையல்ல, அது தூங்கும் குதிரை; அதைத் தட்டி எழுப்பினால் திராவிடப் படை மீண்டும் கிளர்ந்தெழும்” என மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வரிகளைச் சுட்டிக்காட்டி அவர் உரையாற்றினார். இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கத் தொண்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பயந்து போய் அலறுகிறார் பொம்மை முதல்வர்! ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் பதிலடி!