தேங்காய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் கேரளாவில் கோவில்களில் நேர்த்தி கடனை செலுத்துவதை பக்தர்கள் தள்ளி வைத்து வருகிறார்கள். இதனால் 30 சதவீதம் வரை நேர்த்திக்கடன் செலுத்துவது குறைந்துள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
தேங்காய் வியாபாரிகள் வேதனை:
கேரளாவில் பல கோவில்களில் தேங்காய் பயன்படுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். குறிப்பாக திருவனந்தபுரம் பழவங்காடி கணபதி கோவில், கொல்லம் கொட்டாரக்கர மகா கணபதி கோவில், மலப்புறம் காடம்புழா பகவதி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். தற்போது விலை உயர்வு காரணமாக தேங்காய் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயே முதல் முறை... இனி போலீசுக்கு ஆப் மூலம் வார விடுமுறை...!
ஒரு தேங்காய் உடைக்கும் பக்தர்கள் தற்போதும் கோவிலுக்கு வந்து தேங்காய் உடைப்பதாகவும், ஆனால் 51, 101, 1001, என்ற எண்ணிக்கையில் தேங்காய் உடைக்கும் பக்தர்கள் தற்போதைய தேங்காய் விலையை கருத்தில் கொண்டு நேர்த்திக்கடனை தள்ளி வைக்கும் நிலைக்கு சென்றுள்ளார்கள் என்றும் தேங்காய் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேரள கோயில்களில் மாற்றம்:
இதேபோல் கேரளாவில் பெரிய கோவில்களில் சுற்றிலும் விளக்கு ஏற்றி வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி தான் கோவில் சுற்று விளக்கு வழிபாடு நடத்தப்படும். இதற்காக கோவிலில் தேங்காய் எண்ணெய் வியாபாரிகள் இடத்தில் டெண்டர் விடுவது வழக்கம். இதுவரை 300 ரூபாய் வரை டெண்டர் விடப்பட்டது. தேங்காய் விலை ஏற்றம் காரணமாக தேங்காய் எண்ணெய் விளையும் 400 ரூபாய் கடந்துவிட்டது.
இதனால் கோவில்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக எண்ணெய் சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர்கள் விலை உயர்த்தி கேட்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் கோவிலில் சுற்று விளக்கு ஏற்றி வழிபாடு செய்யும் நடைமுறைகளுக்கும் பிரச்சனை எழுந்துள்ளது.
தேங்காய் விலை உயர்வுக்கான காரணங்கள் என்ன?
தேங்காய் விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமானது இந்த ஆண்டு விளைச்சல் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் கால நிலை மாற்றம் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தேங்காய் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சபரிமலை மாதா பூஜைக்காக திறக்கப்பட உள்ளது. ஐயப்பன் கோவிலைப் பொறுத்தவரை அங்கு செல்லக்கூடிய பக்தர்கள் சூரை தேங்காய் உடைப்பதற்காகவும் நெய் தேங்காய் எடுத்துச் செல்வதும் வழக்கம். தேங்காய் விலை உயர்வு ஐயப்ப பக்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது. தொடர்ந்து தினமும் தேங்காய் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பக்தர்கள் வருகையும் நேர்த்திக் கடன்களும் குறைந்துள்ளது. இதனால் கோவில்களில் தேங்காய் கடை வைத்து வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: “தமிழகத்தில் தொழில் துறை முடங்கியிருக்கு, பெண்களுக்கு பாதுகாப்பில்ல” - மத்திய இணையமைச்சர் ஆவேசம்...!