கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றிவரும் ரோலக்ஸ் காட்டு யானையைப் பிடிக்க சின்னத்தம்பி கும்கி யானை வரவழைக்கப்பட்டதுள்ளது.
கோவை தொண்டாமுத்தூர், நரசீபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு உள்ளது. அதில் வலம் வரும் ஒற்றை ஆண் காட்டு யானைக்கு அந்தப் பகுதி மக்கள் ‘ரோலக்ஸ்’ என்று பெயரிட்டுள்ளனர். ரோலக்ஸ் யானை விவசாய நிலங்களை சேதப்படுத்தி, மனிதர்களை தாக்குவதாக உள்ளூர் வாசிகள் புகார் எழுப்பி வருகிறார்கள்.
தொடர்ந்து ரோலக்ஸ் யானையை பிடித்து வேறு பகுதியில் விட வேண்டும் என்று அந்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யானையை பிடிக்க முடிவு செய்தனர்.
இதையும் படிங்க: #BREAKING: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!
கோவை தொண்டாமுத்தூர், நரசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்புக் பகுதிகளில் உலா வரும் ரோலக்ஸ் என்ற காட்டு யானையை பிடித்து, வேறு வனப்பகுதிக்கு இடமாற்றம் செய்யும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக டாப்ஸ்லிப் வனப்பகுதியில் இருந்து நரசிம்மன், முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகள் கோவைக்கு கொண்டுவரப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்க மயக்க ஊசி செலுத்த முயன்ற போது கால்நடை மருத்துவர் விஜயராகவன் என்பவரை யானை தாக்கியதில் காயமடைந்தார். இதையடுத்து காட்டு யானையை பிடிக்கும் பணி சற்று தொய்வு அடைந்தது, இந்நிலையில் காட்டு யானையை பிடிக்க வரவழைக்கப்பட்ட நரசிம்மன் மற்றும் முத்து ஆகிய இரண்டு கும்கி யானைகளுக்கும் மதம் பிடிக்க ஆரம்பித்தது.
இதனால் பாதுகாப்பு கருதி கடந்த வெள்ளிக்கிழமை இரண்டு கும்கி யானைகளும் மீண்டும் டாப்ஸ்லிப் யானை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் காட்டு யானையை பிடிப்பதற்காக டாப்ஸ்லிப் யானை முகாமில் இருந்து சின்னதம்பி என்ற கும்கி யானை கெம்பனூர் பகுதிக்கு வரவழைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் மீண்டும் ரோலக்ஸ் காட்டு யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் துவங்கி உள்ளனர்.
இதையும் படிங்க: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிலை கடத்தல்... 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்...!