தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் இன்று அமைச்சராகப் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசில் காங்கிரஸ் கட்சிக்கு இடம் கிடைத்துள்ளது. இதன் மூலம் 1967-க்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் கட்சி தமிழ்நாடு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார், அடிமட்ட அரசியலில் இருந்து உயர்ந்து வந்தவர். கல்லூரி காலத்தில் அனைத்து கல்லூரி மாணவர் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்ற அவர், பின்னர் இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராகவும், கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றினார். மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியதன் மூலம் பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தலில் கிள்ளியூர் தொகுதியில் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், 2021-ல் இரண்டாவது முறையும், 2026 தேர்தலில் மூன்றாவது முறையும் வெற்றி பெற்று தொடர்ச்சியான மக்கள் ஆதரவை நிரூபித்துள்ளார். ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவியேற்று சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை ஆளுநர் மாளிகையில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் 23 புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர். இதன் மூலம் தவெக அரசு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வலுவான ஆட்சியமைப்பை நோக்கி முன்னேறுகிறது.
இதையும் படிங்க: வினாத்தாள் கசியும் போதெல்லாம் விசாரணை குழுவா? பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
இன்று அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேஷ்குமார் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அப்போது காமராஜர் வாழ்க., ராஜீவ் காந்தி வாழ்க., ராகுல் காந்தி வாழ்க என உறுதிமொழி எடுத்த போது கூறி இருந்தார். அப்போது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இவை உங்களுடைய உறுதிமொழியில் இல்லை எனக் கூறி கடிந்தார்.
இதையும் படிங்க: மோடி அரசின் தவறுக்கு பொதுமக்கள் விலை கொடுக்கின்றனர்..!! பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி கண்டனம்..!!