மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான மத்திய அரசின் முன்மொழிவு, தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் வலிமையைப் பெருமளவில் சிதைக்கும் எனத் தெலங்கானா முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அவர் எழுதியுள்ள மூன்று பக்கக் கடிதத்தில், இந்தப் பாதிப்புகளைத் தடுக்கத் தென்னிந்திய மாநிலங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு முன்மொழிந்துள்ள புரோ-ரேட்டா (Pro-rata) முறையின்படி தொகுதிகளை அதிகரிப்பது தென்னிந்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி என அவர் குறிப்பிட்டுள்ளார்: தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிடம் 40 இடங்களும், உத்தரப் பிரதேசத்திடம் 80 இடங்களும் உள்ளன (இடைவெளி 40). புதிய முறையின்படி தமிழ்நாடு 60 இடங்களை அடைந்தால், உத்தரப் பிரதேசம் 120 இடங்களை எட்டும் (இடைவெளி 60 ஆக உயரும்). இதனால் மக்களவையில் தமிழகம் போன்ற மாநிலங்களின் செல்வாக்கு ஒப்பீட்டளவில் கணிசமாகக் குறையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
மக்கள்தொகை கட்டுப்பாடு, கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சிறந்து விளங்கும் மாநிலங்கள் இதற்காகத் தண்டிக்கப்படுகின்றன என ரேவந்த் ரெட்டி ஆதங்கம் தெரிவித்துள்ளார். மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் அதேவேளையில், மக்கள் தொகை அதிகம் உள்ள வடமாநிலங்கள் அதிக இடங்களைப் பெறும். இது வளர்ச்சியைத் தண்டிக்கும் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தைப் பரிசளிக்கும் ஒரு அபாயகரமான சூழலை உருவாக்கும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினும் திமுகவும் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட முடியாது! பாஜவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

நிதிப் பகிர்வில் ஏற்கனவே தெற்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதை அவர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். பீகார் மாநிலம் தான் பங்களிக்கும் ஒவ்வொரு ஒரு ரூபாய்க்கும் ஈடாக ரூ. 6.69 பெறுகிறது. ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்களின் ஒரு ரூபாய் பங்களிப்பிற்கு வெறும் 26 பைசா மட்டுமே திரும்பப் பெறுகின்றன. தொகுதி மறுசீரமைப்பும் அமலானால், இந்த நிதியியல் அநீதியுடன் அரசியல் அநீதியும் சேரும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக ஒரு புதிய 'ஹைப்ரிட் மாடல்' (Hybrid Model) முறையை அவர் பரிந்துரைத்துள்ளார். அதிகரிக்கப்படும் 850 இடங்களில், பாதியை (50%) புரோ-ரேட்டா முறையிலும், மீதி பாதியை (50%) மாநிலங்களின் பொருளாதாரப் பங்களிப்பு (GSDP) மற்றும் பிற செயல்பாட்டு அளவுகோல்களின் அடிப்படையிலும் ஒதுக்க வேண்டும். இது எந்த மாநிலமும் தனது வளர்ச்சிக்காகத் தண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் வலிமை அதன் பன்முகத்தன்மையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் சமமான பிரதிநிதித்துவத்திலும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தப் பிரச்சனையை நாடாளுமன்றத்தில் எழுப்பவும், பிற தென்னிந்திய முதலமைச்சர்களுடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த போராட்டத்தை முன்னெடுக்கவும் முன்வருமாறு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: ராசிபுரம் வரை பரவிய கோபாலபுர ஊழல்! பஸ் வசதி கூட இல்லை என அண்ணாமலை தாக்குதல்!