தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சமூக வலைதளங்களில் புதிய கணக்குகளை உருவாக்கி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் தொகுதி நிகழ்ச்சிகளை வீடியோக்களாகப் பதிவேற்றி வருகின்றனர்.
இதுவரை சமூக வலைதளங்களில் செயல்படாத அல்லது குறைவாகவே இயங்கிய பல எம்.எல்.ஏ.க்கள், இப்போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் தீவிரமாக இயங்கத் தொடங்கியுள்ளனர், இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வில் சில அமைச்சர்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர். அவர்கள் தங்கள் பொது நிகழ்ச்சிகள், தொகுதி விவகாரங்கள், மக்களுடனான உரையாடல்களை வீடியோவாகப் பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர். ஆனால், இவற்றில் சில வீடியோக்கள் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளன.
இதையும் படிங்க: ஆந்திராவுக்கு சென்ற அதிரடி ஆஃபர்! முட்டி மோதும் திமுக - அதிமுக! நார லோகேஷ் நச் பதில்!

பல எம்.எல்.ஏ.க்கள் இதுவரை சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை அல்லது இருந்தாலும் புதுப்பிக்காமல் இருந்தனர். ஆனால், தேர்தல் நெருங்குவதால், அரசு நலத்திட்டங்கள், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சாதனைகள், மற்றும் தங்கள் தொகுதி நிகழ்ச்சிகளைப் பற்றி வீடியோக்களாகப் பதிவேற்றி வருகின்றனர்.
தி.மு.க. நிர்வாகிகள் இதுகுறித்து கூறுகையில், "கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி, தி.மு.க.வின் செயல்பாடுகள் மற்றும் அரசின் திட்டங்களை பிரபலப்படுத்துவதற்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு சமூக வலைதளங்களை கையாள தனி குழு உள்ளது.
ஆனால், பலர் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க முடியாமல் இருந்தனர். இப்போது, தேர்தல் காரணமாக, எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களுக்கு செய்த நல்ல பணிகளையும், அரசு திட்டங்களையும் விளம்பரப்படுத்தி வருகின்றனர்," என்றனர்.
இந்த திடீர் சமூக வலைதள சுறுசுறுப்பு, தேர்தல் மூலோபாயத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. மக்களிடையே அரசின் சாதனைகளை எடுத்துச் செல்வதற்கு இது உதவினாலும், சில வீடியோக்கள் சர்ச்சையாக மாறுவது கட்சிக்கு சவாலாக உள்ளது. தி.மு.க.வின் இந்த முயற்சி, தேர்தல் களத்தில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரும் மாதங்களில் தெரியவரும்.
இதையும் படிங்க: ஃபாரின் டூர் கூடாது! எலெக்ஷன் முடியுற வரை இன்ப சுற்றுலா நோ!! ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!