எழுபது ஆண்டு காலப் பாரம்பரியம், அறிஞர் அண்ணா காலத்து மேடைப் பேச்சு, கலைஞர் காலத்து உடன்பிறப்பு உணர்வு என்று மார்தட்டிக் கொள்ளும் திமுகவின் அண்மைக்கால மாநாடுகள், தவெக நிழல் போல மாறி வருவது வேடிக்கையாக இருக்கிறது என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுத் தரம் மற்றும் இளைஞர்களை ஈர்க்கும் பாணியைக் கண்டு, திமுக தனது பழைய பாணியைக் கைவிட்டு, மெல்ல மெல்ல 'தவெக' மாநாடு போலவே உருமாறி வருவது அரசியல் அரங்கில் பெரும் சிரிப்பலையை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மூன்று நாட்கள் சொற்பொழிவும், மேடை அலங்காரமும், அடுக்குமொழி வசனங்களும்தான் திமுக மாநாடுகளின் அடையாளமாக இருந்தன என்றும், ஆனால் இன்று, தவெக மாநாட்டில் காணப்பட்ட அதே போன்ற பிரம்மாண்ட நுழைவு வாயில்கள், அதே போன்ற நவீன ஒளி-ஒலி அமைப்புகள், மற்றும் இளைஞர்களைக் கவரும் வகையிலான 'Ramp walk' மேடை அமைப்பு என ஒவ்வொன்றையும் திமுக அப்படியே நகலெடுக்கத் தொடங்கியுள்ளது என்றார்.

கொள்கைகள் பழையதாக இருந்தாலும், தோற்றத்தில் அப்படியே தவெக-வை நினைவுபடுத்துவது இவர்களின் அச்சத்தைக் காட்டுகிறது என்று கூறிய நாஞ்சில் சம்பத், தவெக மாநாட்டில் இளைஞர்கள் காட்டிய எழுச்சியைக் கண்டு மிரண்டு போன திமுக தலைமை, இப்போது தங்கள் மாநாடுகளிலும் அதே போன்ற அலையை கொண்டு வரத் துடிக்கிறது என்று கூறினார். ஆனால், சுயமாகச் சிந்திக்கத் தெரியாத தலைமையால் திமுக மாநாடு தோல்வியை தழுவுகிறது., இது அந்தப் இயக்கத்தின் பலவீனத்தையே பறைசாற்றுகிறது என்றும் மேடையைப் பார்ப்பவர்களுக்கு திமுக மாநாடா அல்லது தவெக மாநாட்டின் இரண்டாம் பாகமா என்ற குழப்பத்தையே ஏற்படுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “ஸ்டாலின் இதை மட்டும் செஞ்சிட்டா... பேசுறதையே நிறுத்திடுறேன்...” - சவடாலாய் சவால் விட்ட நாஞ்சில் சம்பத்...!
நகலெடுப்பதில் கூட ஒரு நேர்த்தி வேண்டாமா என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புவதாகவும், அடுத்தவர்களின் நிழலில் ஒதுங்க நினைக்கும் எந்த இயக்கமும் நீண்ட காலம் நிலைக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாங்கள் தான் முன்னோடி என்று சொல்லிக்கொண்டே, பின்னால் வந்தவர்களின் காலடித் தடத்தைப் பின்பற்றுவது, திமுகவின் அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றும் இனி வரும் காலங்களில் திமுக மாநாடுகளில் காப்பி அடிக்கும் அவசரத்தில் தவெக-வின் கொடியை கையில் ஏந்தினாலும் ஏந்துவார்கள் எனவும் விமர்சனம் செய்தார்.
இதையும் படிங்க: “அவர்களுக்கு பழக்கம் எங்களுக்கு வழக்கம்...” - ரைமிங்காக பேசி பாஜகவை விளாசிய நாஞ்சில் சம்பத்...!