தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பதற்றம் இப்போது உச்சத்தைத் தொட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து “ஆட்சியில் பங்கு” மற்றும் “அதிக தொகுதிகள்” என்ற இரண்டு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த காங்கிரஸ் ஐவர் குழுவும் இதே கோரிக்கையை முன்வைத்தது. ஆனால் தி.மு.க. தரப்பில் “ஆட்சியில் பங்கு கொடுப்பது வழக்கம் இல்லை” என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. துணை பொதுச் செயலரும் மூத்த அமைச்சருமான ஐ.பெரியசாமி இதை வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.செல்வப்பெருந்தகை, “அமைச்சர் பெரியசாமியின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே. ஆட்சியில் பங்கு குறித்து தி.மு.க. தலைமையும் காங்கிரஸ் மேலிடமும் பேசி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுகவா? அதிமுகவா? யாருடன் கூட்டணி? கேப்டன் பார்முலாவை கையில் எடுக்கும் பிரேமலதா! அதிரும் தென் ஆற்காடு!
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பொங்கல் அன்று வெளியிட்ட பதிவில் கேரளாவின் UDF (ஒருங்கிணைந்த ஜனநாயக முன்னணி) மாடலை சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் அதேபோன்ற கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்தியது கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்கு ஆதரவாக பேசியது தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளதாக தி.மு.க. தரப்பில் முழுமையாக நம்பப்படுகிறது.

இந்த சூழலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறினால், தி.மு.க. தனித்து 200 தொகுதிகளில் போட்டியிட தயாராகி வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக கூட்டணியில் இருக்க விரும்பும் சிறிய கட்சிகளை மட்டும் தக்கவைத்துக்கொண்டு போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவே, வரும் ஜனவரி 20-ஆம் தேதி சென்னை அறிவாலயத்தில் தி.மு.க. மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தி.மு.க. துணை பொதுச் செயலர் ஆ.ராஜா மற்றும் தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் ஆகியோர் கூடலூரில் தனியாக சந்தித்து பேசியதும் குறிப்பிடத்தக்கது. அப்போது ஆ.ராஜா, “ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கும் போது தொடர்ந்து வலியுறுத்துவது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததல்ல.
ராகுல் ஏன் விஜய்க்கு ஆதரவாக பேசுகிறார்?” என்று கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு கிரீஷ் சோடங்கர் “ஜனநாயகன் படம் முடக்கப்பட்டுள்ளது. அதனால் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். ஆட்சியில் பங்கு கோரிக்கை ராகுலின் அனுமதியுடனே வைக்கப்பட்டது” என்று பதிலளித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. – காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
இதையும் படிங்க: சீனியர் செங்கோட்டையன் மிஸ்ஸிங்!! Why Bro?! தவெக தேர்தல் அறிக்கை குழுவால் சர்ச்சை!!