திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக எம்எல்ஏவாக உள்ள முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த மாதம் 20-ஆம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல்துறையினர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவரது தரப்பில் ஜூலை 10-ஆம் தேதி ஆஜராக இருப்பதாக காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், விசாரணைக்கு சென்றால் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதிய அனிதா ராதாகிருஷ்ணன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினார். ஆனால், அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில மணி நேரங்களிலேயே காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஸ்டார் ஓட்டலில் நடந்த மீட்டிங்... தவெக எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக பேரம்... ரூ.180 கோடிக்கு ஓ.கே. சொன்ன முக்கியப்புள்ளி...!

கைது செய்யப்பட்ட பின்னர், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர், நள்ளிரவில் திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சிதம்பரம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டும் அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்கவே கைது செய்யப்பட்டதாகவும் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட், அனிதா ராதாகிருஷ்ணனை நீதிமன்றக் காவலில் அனுப்ப மறுத்து, ரூ.10 ஆயிரம் பிணைத்தொகையுடன் சொந்த ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். மேலும், தொடர்ந்து 10 நாட்கள் ஆத்தூர் காவல் நிலையத்தில் நேரில் சென்று கையெழுத்திட வேண்டும், விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனைகளையும் விதித்தார்.
இந்த நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொய்யான வழக்கு பதிவு செய்ததன் மூலம் குதிரை பேரம் அம்பலம் ஆகியுள்ளது என்று திமுக நிர்வாகி பரந்தாமன் தெரிவித்தார். பாஜக பயன்படுத்தும் அதே யுக்தியை தான் தற்போது தமிழக வெற்றிக் கழகமும் பயன்படுத்துகிறது என்று கூறியுள்ளார். நீதிமன்றத்தால் தமிழக வெற்றி கழகத்தின் மூக்கு அறுக்கப்பட்டிருக்கிறது என்றும் முன்னாள் எம்எல்ஏ பரந்தாமன் கூறியுள்ளார். அவதூறு வழக்கில் கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் அவதூறு வழக்கிற்காக ஆறு மணி நேரம் விசாரணை தேவையா என்றும் கேள்வி எழுப்பினார். தினம்தோறும் திமுக மீது என்ன பழி போடலாம் என தமிழக வெற்றிக்கழக அரசு யோசித்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்! த.வெ.க. கூட்டணியில் 30% இடங்கள் வேண்டும்! முதல்வர் விஜயிடம் காங்., கோரிக்கை!