திமுக இளைஞரணிக்கு அக்கட்சி தலைமை தற்போது அதிக முக்கியத்துவம் அளித்து வருவது தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞரணி 1980ஆம் ஆண்டு மதுரையில் முறையாகத் தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை கட்சியின் அடித்தளமாகவும், கொள்கைப் பரப்புரையின் ராணுவமாகவும் திகழ்கிறது.
கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் நீண்ட காலம் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பு வகித்தார். அவரது வழியில் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இது கட்சியின் இளைய தலைமுறைக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் முக்கியமான திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்றதில் இருந்து அணி புத்துயிர் பெற்றது. லட்சக்கணக்கான இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்த்தல், அடித்தளம் முதல் மாவட்டம் வரையிலான அமைப்புகளை வலுப்படுத்துதல், பயிற்சி முகாம்கள் நடத்துதல், புதிய பேச்சாளர்களை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. குறிப்பாக 2024ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த இளைஞரணி மாநில மாநாடு பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: தத்தளிக்கும் தவெக... கேள்விகளால் துளைத்த சிபிஐ..! விஜயிடம் 5 மணி நேரம் விசாரணை..!
அதேபோல் 2025இல் திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு லட்சக்கணக்கானோர் பங்கேற்புடன் நடைபெற்றது. இதனிடையே பிப்ரவரி 7ஆம் தேதி திமுக இளைஞரணி தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். பிப்ரவரி 7ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் திடலில் சந்திப்பு நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் ஸ்ட்ரைக்... மாணவர்களை பாதிக்கும்னு கூட உரைக்கலையா? அண்ணாமலை கொந்தளிப்பு..!