ஏர்வாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீப ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சி மற்றும் ஜிம் கலாச்சாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஆரோக்கியமான உடல் அமைப்பை பெறும் நோக்கில் பலரும் அதிக அழுத்தமான பயிற்சிகளை மேற்கொள்வது வழக்கமாகியுள்ளது. ஆனால், உடல் நிலைக்கு ஏற்ப சரியான பயிற்சி திட்டம் பின்பற்றாதது, போதுமான தண்ணீர் அருந்தாதது, அல்லது உணவு முறையில் சமநிலை இல்லாமை போன்ற காரணங்களால் திடீர் இதயநோய் தாக்கம் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக பல மருத்துவ அறிக்கைகள் எச்சரிக்கின்றன.
குறிப்பாக, பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர்கள் வழிகாட்டுதலின்றி கனரக உடற்பயிற்சிகளை மேற்கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் கட்டுடலை பெற வேண்டும் என்ற காரணத்தால் பள்ளி மாணவர்கள் சிலர் செய்யும் காரியம் அவர்கள் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடுகிறது.
இதையும் படிங்க: அதிமுக, தவெக அடிமடியில் கை வைக்கும் ஸ்டாலின்! ஒன் டூ ஒன் சந்திப்பில் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்!
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் முகம்மது பாகிம் (17) நேற்றிரவு ஏர்வாடி தைக்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீர் என மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் மாணவன் முகம்மது பாகிம் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் இபிஎஸ்... யோசிச்சு பேசுங்க! அமைச்சர் எ.வ. வேலு பதிலடி...!