தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்று வரும் ‘சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி’ (Special Intensive Revision - SIR) தொடர்பாக, படிவங்களைச் சரியாக நிரப்பாத 12,43,363 வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்களில் முழுமையான விபரங்களை அளிக்காதது மற்றும் ஆவணக் குளறுபடிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாகத் திருவள்ளூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் பேருக்கும், கோவை மாவட்டத்தில் 1.10 லட்சம் பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலைச் சீரமைக்கும் நோக்கில் தேர்தல் ஆணையம் SIR எனும் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, பூத் லெவல் அதிகாரிகள் (BLO) வீடு வீடாகச் சென்று வாக்காளர் விபரங்களைச் சேகரித்தனர். இதில், தமிழகம் முழுவதும் சுமார் 12,43,363 வாக்காளர்கள் வழங்கிய படிவங்களில் பிழைகள் அல்லது முழுமையற்ற விபரங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 2) விடுமுறை!

இதனைத் தொடர்ந்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்களுக்கு விளக்கம் கேட்டுத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் 1.85 லட்சம் பேருக்கும், கோவை மாவட்டத்தில் 1.10 லட்சம் பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். இதில் முகவரி மாறியவர்கள் (66.40 லட்சம்), இறந்தவர்கள் (26.90 லட்சம்) மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள் (3.98 லட்சம்) அடங்குவர்.
தற்போது நோட்டீஸ் பெற்றுள்ள வாக்காளர்கள், தங்களது விபரங்களைச் சரிசெய்து உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வாய்ப்பு வழங்கப்படும். இதற்காகத் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 7, 2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், தங்களது பெயர் விடுபடாமல் இருக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் வாக்காளர்கள் படிவம் 6 அல்லது படிவம் 8-ஐப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அதிரடித் திருத்தப் பணிகள் மூலம் முறைகேடான வாக்காளர்களை நீக்கி, ஒரு தூய்மையான வாக்காளர் பட்டியலை உருவாக்கத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.
இதையும் படிங்க: சென்னைக்கு மிக அருகில் வலுவிழந்த 'டிட்வா' புயல்.. திருவள்ளூர், சென்னைக்கு 'ரெட் அலர்ட்'!