தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சென்னையில் பறக்கும் படையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ₹1.10 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு அலுவலர் குமார் தலைமையிலான பறக்கும் படையினர், இன்று மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் ஏஜென்சிக்குச் (CMS) சொந்தமான பணம் கொண்டு செல்லும் வாகனத்தை நிறுத்திச் சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக ₹1.10 கோடி பணம் இருப்பது கண்டறியப்பட்டது.

வாகனத்தில் இருந்த பணத்திற்குத் தேவையான உரிய ஆவணங்கள் மற்றும் வங்கித் தரப்பிலான முறையான அனுமதிக் கடிதங்கள் ஏதும் இல்லாததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட அந்த ₹1.10 கோடி பணத்தை அதிகாரிகள் உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: இதுவரை ₹151.93 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல்! தேர்தல் ஆணையம் அறிக்கை!
பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் வாகனம் ஆகியவை மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்தப் பணம் யாருக்காகக் கொண்டு செல்லப்பட்டது? இதன் பின்னணியில் ஏதேனும் தேர்தல் முறைகேடுகள் உள்ளனவா? என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், மதுரவாயல் பகுதியில் இவ்வளவு பெரிய தொகை பிடிபட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்னை சென்ட்ரலில் ரூ. 12.50 லட்சம் வெள்ளி பறிமுதல்! தேர்தல் பறக்கும் படை அதிரடி!