ஈரோடு அருகே, பொது மயானத்தை, பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் போலீசார் முன்னிலையில் பட்டியலினத்தவர் ஆதிக்க சமூகத்தினர் காலில் விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெருந்துறை தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பாளி கிராமத்தில் 100.க்கும் மேற்பட்ட பட்டியலினத்தவர்கள் வசிக்கும் நிலையில், அதே ஊரில் உள்ள பொது மயானத்தை பயன்படுத்த மாற்று சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனால் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திங்களூரில் இந்த மக்கள் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது தொடர்பான பிரச்சனையில் சமீபத்தில் மயானத்தை அளவீடு செய்த வட்டாச்சியர் இது அனைவருக்குமான பொது மயானம் என அறிவிப்பு செய்தார்.
இதையும் படிங்க: வித்யா ராமராஜுக்கு ரூ.1.55 கோடி காசோலை! ஆசிய & செஸ் சாதனையாளர்களுக்கு முதல்வர் விஜய் பாராட்டு!
இந்நிலையில், இதே ஊரை சேர்ந்த BSP நிர்வாகி காளியப்பன் என்பவரின் தந்தை சென்னி (80) வயது மூப்பால் கடந்த திங்களன்று உயிரிழந்தார். அவரது சடலத்தை பெரும்பாளி பொது மயானத்தில் அடக்கம் செய்ய சென்ற போது, மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது காவல் ஆய்வாளர், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இனிமேல் எந்த வேலைக்கும் எங்களிடம் வரக்கூடாது என மாற்று சமூகத்தினர் மிரட்டியதால் கை கூப்பி நின்ற பட்டியலின மக்கள் போலீசார் முன்னிலையில் அவர்களின் காலில் விழுந்தனர். அதன் பின் முதல் முறையாக அந்த கிராமத்தின் பொது மயானத்தில் பட்டியலினத்தவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
பட்டியலின சமூகத்தினரை மிரட்டி காலில் விழ வைத்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்..
பொது மயானத்தை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததுடன், பட்டியலினத்தவரை மிரட்டல் விடுப்பதையும் காலில் விழுவதையும் வேடிக்கை பார்த்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறைனர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்..
இதையும் படிங்க: மானிய கோரிக்கை விவாதங்கள் வெறும் அறிக்கைதான்! பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு!