ஈரோடு மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக மூடப்பட்டிருந்த எலைட் மது பான கடைகள் எவ்வித அறிவிப்பும் இன்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பெயர் பலகை இல்லாமல் கடைகள் திறக்கப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்ததும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 700.க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மூடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்தார். இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 42 மதுபான கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் ஈரோடு, பவானி, கோபிசெட்டிபாளையம் பெருந்துறை உள்ளிட்ட ஐந்து இடங்களில் இருந்த உயர்ரக மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் எலைட் மதுபான கடைகளும் மூடப்பட்டன.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எலைட் மதுபான கடைகள், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஈரோடு நகரில் போக்குவரத்து மிகுந்த ரயில் நிலையம் எதிரே ஏற்கனவே எலைட் மதுபான கடை செயல்பட்டு வந்த இடத்தில் மீண்டும் கடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடையின் பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. கடை இருப்பதற்கான எவ்வித விபரமும் இல்லாமல் மதுபானங்கள் வழக்கம் போல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் எலைட் மதுபான கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மேலிடத்து உத்தரவின் பேரில் கடைகள் திறக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் தெரியாது என கூறினர்.
இதையும் படிங்க: 20 நாட்களில் 200 சஸ்பென்ஷன்... டாஸ்மாக்கில் விஜய் அரசின் அதிரடி ஆபரேஷன்..!
மதுபான கடைகள் மூடப்படுவதில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றம் சாட்டியுள்ள தன்னார்வலர்கள் எலைட் மதுபான கடைகள் திறக்கப்பட்டு இருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். கடை எண், பெயர் பலகை உள்ளிட்ட எவ்வித விபரங்களும் இல்லாமல் கடைகளைத் திறந்து விற்பனை செய்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளனர் பொதுமக்கள் கூடும் அதிகம் கூடும் இடங்களில் உள்ள எலைட் மதுக்கடைகளையும் மூட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் இதில் அரசு வெளிப்படை தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்..
இதையும் படிங்க: ஆண்டுக்கு 8,000 கோடி இழப்பு... தனியார் வசமாகிறதா டாஸ்மாக்?... பகீர் தகவலை சொன்ன அமைச்சர்...!