கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்கள் மீதும் 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா பிரதமர் மார்க் கார்னியின் சமீபத்திய சீனாவுக்கான அதிகாரப்பூர்வப் பயணத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்த மிரட்டலைப் பதிவிட்டுள்ளார்.
சீனா தனது பொருட்களை அமெரிக்காவிற்குள் கடத்துவதற்கான ஒரு நுழைவுவாயிலாக கனடாவைப் பயன்படுத்த பிரதமர் மார்க் கார்னி நினைத்தால், அது ஒருபோதும் நடக்காது என்று ட்ரம்ப் கூறியுள்ளார். சீனா கனடாவை உயிருடன் விழுங்கிவிடும்; அந்த நாட்டின் வணிகங்கள், சமூகக் கட்டமைப்பு மற்றும் வாழ்க்கை முறையைச் சீனா அழித்துவிடும் என அவர் எச்சரித்துள்ளார். சீனாவுடனான ஒப்பந்தம் கனடாவிற்கு ஒரு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்றும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த 100% வரி விதிப்பு மிரட்டல், கனடாவின் உலோக உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் இயந்திரத் தளவாடங்கள் ஆகிய துறைகளைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் என அஞ்சப்படுகிறது. ஏற்கனவே கிரீன்லாந்தை வாங்கும் விவகாரம் மற்றும் நேட்டோ (NATO) கூட்டணி தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அமெரிக்கா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய வர்த்தக மோதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறிய அமெரிக்கா: சீனா மீதான அதிருப்தியால் ட்ரம்ப் அதிரடி!
சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குப் பயணம் மேற்கொண்ட முதல் கனடியப் பிரதமர் மார்க் கார்னி ஆவார். அமெரிக்காவை மட்டும் சாராத ஒரு பொருளாதாரத்தை உருவாக்கும் நோக்கில், விவசாயம் மற்றும் எரிசக்தி துறைகளில் சீனாவுடன் உறவை மேம்படுத்த அவர் முயன்று வருகிறார். ட்ரம்ப்பின் மிரட்டலுக்குப் பதிலளித்த பிரதமர் கார்னி, "உலகம் ஒருபோதும் எதேச்சதிகாரப் போக்குகளுக்கு அடிபணியத் தேவையில்லை என்பதற்குத் தனது நாடு ஒரு உதாரணமாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐ.நா எனக்கு உதவவில்லை..!! ஏப்ரலில் சீனா செல்கிறேன்..!! அமெரிக்க அதிபர் டிரம்ப் பரபரப்பு பேச்சு..!!