தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது மழை பெய்யாததால் அணை அதன் முழு கொள்ளளவை எட்டாத நிலையில் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவில்லை. இதனால் மஞ்சளார் ஆற்றுப்பகுதி முற்றிலும் வறண்டு குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதித்துள்ளது. இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு உத்தரவின் பேரில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணையில் இருந்து இன்று தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவை மற்றும் நிலத்தடி நீர்மட்ட உயர்விற்காக வினாடிக்கு 200 கன அடி நீரை பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டனர்.
தேனி மாவட்ட பகுதியான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, G.கல்லுப்பட்டி, உள்ளிட்ட பகுதிகளுக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்ளப்பட்டி, வத்தலகுண்டு முதல் சிவஞானபுரம் வரையிலான மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர்மட்ட உயர்வுக்காகவும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மொத்தமாக 103 மில்லியன் கன அடி நீர் அணையில் இருந்து திறக்கப்படவுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இதை எப்படி அனுமதிக்கிறீங்க?... காவல்துறையை வெளுத்து வாங்கிய நீதிமன்றம்...!
மேலும் இன்று 200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மாலை முதல் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் படிப்படியாக குறைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் தேனி, திண்டுக்கல் மாவட்ட மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!