மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னதாக, 2025-26ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இன்று (ஜனவரி 29) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணியளவில் மக்களவையில் இந்த ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். இதையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் நாளான கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். தனது உரையில், கடந்த 11 ஆண்டுகளில் அனைத்துத் துறைகளிலும் வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச நெருக்கடிகள் இருந்தபோதிலும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இனிப்புடன் தொடங்கும் பட்ஜெட் பணிகள்! - நார்த் பிளாக்கில் களைகட்டிய அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சி
இந்தியாவின் வீறுநடை பொருளாதார வளர்ச்சியை உலக அளவில் புகழ்ந்து பேசும் வகையில் அமைந்திருந்தது அவரது உரை. பொருளாதார ஆய்வறிக்கை என்பது மத்திய பட்ஜெட்டுக்கு முன்னோட்டமாக வழங்கப்படும் முக்கிய ஆவணம். இது நிதி அமைச்சகத்துடன் இணைந்து தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான குழு தயாரிக்கிறது.
இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வளர்ச்சி விகிதம், பணவீக்கம், நிதி நிலை, வேலைவாய்ப்பு, கடன் அளவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், வரவிருக்கும் பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய கொள்கைகள் மற்றும் எதிர்கால பொருளாதார அணுகுமுறைகள் குறித்த முன்னோட்டங்களும் இதில் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இந்தியா 7.4 சதவீத வளர்ச்சியை எட்டும் என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த ஆண்டு ஆய்வறிக்கையில் 6.3 முதல் 6.8 சதவீதம் வரை வளர்ச்சி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், இம்முறை உயர்வான எதிர்பார்ப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை அரசின் பொருளாதாரக் கொள்கைகளை விளக்கும் அதிகாரப்பூர்வ ஆவணமாக விளங்குகிறது. இதன்மூலம் பொருளாதாரத்தின் வலிமை, சவால்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த தெளிவான பார்வையை மக்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் வழங்குகிறது.

இதையடுத்து, தலைமை பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்க உள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெறும் இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட், இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில் பல முக்கிய அறிவிப்புகளை உள்ளடக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: எம்.பிக்களுக்கு 'NO' லீவு..!! பிப்.1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்..!! ஓம் பிர்லா உறுதி..!!