கோவாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாலியல் சுரண்டல் சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெற்கு கோவாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் சோஹம் நாயக், கடந்த மூன்று ஆண்டுகளாக 25 முதல் 30 வரை இளம்பெண்கள் மற்றும் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி, அவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து வைத்து, அந்தப் பெண்களை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
வீடியோக்களை வெளியிட்டு விடுவேன் என்று அச்சுறுத்தியதால், பாதிக்கப்பட்ட பெண்கள் பயத்தில் எந்தப் புகாரும் அளிக்காமல் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், சோஹம் நண்பர்களுடன் மது அருந்தியபோது போதையில் இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோக்களை அவர்களிடம் காட்டியுள்ளார். இதைப் பார்த்த சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக இந்தத் தகவலை பகுதி மக்களிடம் பரப்பினர்.
இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் காவல் நிலையத்துக்கு திரண்டு சென்று, சோஹம் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: 10 முறை தொடர் முதல்வர்?! ராஜ்யசபா எம்.பி தேர்தல்!! எம்.எல்.சி பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ்குமார்!

இந்த அழுத்தத்துக்குப் பிறகு போலீசார் சோஹம் நாயக்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களையும் அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெறும் பணியும் நடைபெற்று வருகிறது.
சோஹம் நாயக், பா.ஜ.க.வைச் சேர்ந்த தொழிலதிபர் சுஷாந்த் நாயக் என்பவரின் மகன் என்பது இந்தச் சம்பவத்துக்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளாக இளம் சிறுமிகள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டும், இதுவரை எந்தப் புகாரும் வராதது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்களும், தீவிர கண்காணிப்பும் தேவை என்பதை மீண்டும் நினைவூட்டுகிறது.
போலீசார் இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தச் சம்பவம் கோவா முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சென்சஸ் கணக்கெடுப்புக்கான தரவுகள்.. டிஜிட்டல் மூலம் சேகரிப்பு..!! சென்சஸ் ஆணையாளர் தகவல்..!!