மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட உயரிய சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகளுக்கு (Padma Awards) தமிழகத்திலிருந்து தேர்வான சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் (மக்கள் மாளிகை) இன்று சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, விருது பெற்றவர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகளை வழங்கிச் சிறப்பித்தார்.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது வாழ்நாள் சாதனைகளைத் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் வகையில் அர்ப்பணித்த வெற்றியாளர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்த விருதுகள் வெறும் அங்கீகாரம் மட்டுமல்ல, கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்குக் கிடைத்த வெற்றி. தமிழகம் கலை மற்றும் பண்பாட்டின் உறைவிடமாகத் திகழ்கிறது. இன்று கௌரவிக்கப்பட்ட சாதனையாளர்கள் இளைய தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாகத் திகழ்கின்றனர்" எனப் புகழாரம் சூட்டினார்.
இதையும் படிங்க: “தமிழகத்தின் பெருமை!” - பத்ம விருது வென்ற 14 சாதனையாளர்களுக்கு அமித் ஷா புகழாரம்.
விருது பெற்ற வெற்றியாளர்கள், தங்களது சாதனைப் பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் மத்திய அரசின் இந்த அங்கீகாரம் தங்களுக்குத் தரும் ஊக்கம் குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையின் பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்தத் தேநீர் விருந்துடன் கூடிய பாராட்டு விழாவில், உயர்மட்ட அதிகாரிகள், கலைஞர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மத்திய அரசு அண்மையில் அறிவித்த பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதுப் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த பல்துறை அறிஞர்களை மாநில அளவில் கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது.
இதையும் படிங்க: 2026 பத்ம விருதுகள் பட்டியல் வெளியீடு: தமிழகத்தைச் சேர்ந்த 10 சாதனையாளர்களுக்குப் பத்ம விருதுகள்!