முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்ததை அடுத்து, இது தொடர்பான விவாதம் சட்டசபையில் காரசாரமாக நடைபெற்றது. தொகுதிப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வாகன வசதி அவசியம் என்ற அரசின் நிலைப்பாட்டையும், மாநிலத்தின் நிதி நெருக்கடியை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளையும் மையப்படுத்தியே இந்த விவாதம் அமைந்தது.
திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பேசுகையில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாமல், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டும் கார் வழங்குவதால் என்ன பயன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார், தொகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்குப் பணி செய்யவே கார்கள் வழங்கப்படுவதாக விளக்கினார்.
தொடர்ந்து செங்கோட்டையன், அரசு வாகனத்தில் செல்லும்போது தனி மரியாதை கிடைக்கும் எனக் கூறி, திமுகவினர் கார் ரேஸுக்கு ரூ.24 கோடி செலவு செய்தது யார் அப்பா வீட்டுப் பணம் என்று கேட்டார். இதற்கு திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு, செங்கோட்டையன் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தபோது ரூ.10 கோடியை பயன்படுத்தாமல் வைத்திருந்ததை சுட்டிக்காட்டி, நாங்களும் அப்படிச் செய்ய வேண்டுமா என்று பதிலடி கொடுத்தார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரத்தில் ஆகஸ்ட் 3-இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு! மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி!

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தேவைப்படுபவர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் எனக் கூறி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கார் தேவையில்லை என அறிவித்தார். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், வசதியாக இருப்பதால் திமுகவினர் மறுப்பதாகக் குறிப்பிட்டு, கார் இல்லாதவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றார்.
அமைச்சர் அருண்ராஜ், கஜானாவில் பணமில்லை எனக் கூறி கார் வேண்டாம் எனும் திமுகவினரை நோக்கி, கலைஞருக்கு கடலில் பேனா சிலை வைக்க வேண்டும் என முன்பு வலியுறுத்தியபோது நிதி இருந்ததா எனக் கேட்டார். திமுக கொறடா எ.வ.வேலு, மத்திய அரசு அனுமதி அளித்தபோதும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போதைய பொருளாதார சூழலில் தேவையில்லை எனத் தள்ளிவைத்ததை நினைவுபடுத்தினார்.
இந்த விவாதத்தில், வாகனத்துடன் மாதாந்திர பராமரிப்பு மற்றும் உதவியாளர் படி உள்ளிட்ட செலவுகளும் பேசப்பட்டன. தேவையானவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இவ்வாறு அரசியல் கட்சிகளிடையே கடும் வாதப்பிரதிவாதங்களுடன் சட்டசபை நடவடிக்கை முடிவடைந்தது.
இதையும் படிங்க: 5 வருஷத்தில் 5 கட்சி மாறிய அமாவாசை நிர்மல் குமார்: நெல்லையில் ஆர்.பி. உதயகுமார் ஆவேச பேட்டி!