குஜராத் மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாமல் பெய்து வரும் கனமழை காரணமாக பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக சூரத், அகமதாபாத், கேடா, தபி, டாங்ஸ், வால்சாட் மற்றும் நவ்சாரி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதிலும் வால்சாட் மாவட்டத்தின் உம்பேர்கான் தாலுகா மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் 36 மணி நேரத்தில் 1200 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருப்பது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக பல கிராமங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் சிக்கியுள்ளன. அங்கு சிக்கியிருந்த சுமார் 1,200 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளில் இருந்து பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நவ்சாரி மற்றும் வால்சாட் மாவட்டங்களில் படகுகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் அவசர மருத்துவக் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீரில் கனமழை கொடூரம்... 11 பேர் பலி; முதல்வருடன் அமித் ஷா அவசர ஆலோசனை!

கனமழை காரணமாக பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வால்சாட், நவ்சாரி மற்றும் சூரத் மாவட்டங்களில் உள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கரையோர கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலுடன் தொலைபேசியில் பேசி நிலைமையை ஆய்வு செய்துள்ளார். தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இதேவேளை, இந்திய வானிலை ஆய்வு மையம் பரூச், சூரத், நவ்சாரி, வால்சாட், டாங்ஸ், நர்மதா, வதோதரா, சோட்டா உதேபூர், பஞ்ச்மஹால் மற்றும் தாஹோத் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திலும் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை கட்டாயம் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 ஆண்டுகள் காணாத கனமழை! மும்பையை புரட்டிப்போட்ட வானிலை! தத்தளிக்கும் மக்கள்!