டோக்கியோ: ஜப்பான் வரலாற்றில் முதல் முறையாக ஒரு வெளிநாட்டவர் அதிவேக புல்லட் ரயில் (சின்கன்சென்) இயக்கிய சாதனை நிகழ்ந்துள்ளது. மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்காக பயிற்சி பெற்ற இந்திய டிரைவர் விஷால் குமார் ரே, ஜப்பானில் பயணிகள் ரயிலை நேரடியாக இயக்கியுள்ளார். இது இரு நாடுகளுக்கு இடையிலான தொழில்நுட்ப கூட்டுறவின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வரும் மும்பை - ஆமதாபாத் அதிவேக புல்லட் ரயில் திட்டம் ரூ.1.08 லட்சம் கோடி செலவில் அமலாக்கப்படுகிறது.
508 கிலோமீட்டர் தொலைவை 2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் கடக்கும் இந்த ரயில், ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (ஜைகா) நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. ஜப்பானின் புகழ்பெற்ற சின்கன்சென் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: யுடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமின்!! சென்னை ஐகோர்ட் உத்தரவு!
ஜப்பானில் புல்லட் ரயில் இயக்க உரிமம் பெறுவது மிகக் கடினமானது. 3 முதல் 5 ஆண்டுகள் கடுமையான பயிற்சி, உளவியல் தேர்வுகள், மருத்துவத் தகுதி ஆகியவை தேவைப்படும். விமான பைலட் உரிமத்தை விட கடினமானது என்று கூறப்படும் இப்பயிற்சியை இந்திய டிரைவர்கள் 8 மாதங்களில் முடித்துள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் 7 இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டனர். சிமுலேட்டர் பயிற்சிக்குப் பிறகு, நேரடி ரயில் இயக்கப் பயிற்சியில் ஈடுபட்டனர்.

இதன் நிறைவாக, இந்திய டிரைவர் விஷால் குமார் ரே நிகாட்டா நிலையத்தில் இருந்து டோக்கியோ வரையிலான 4 மணி நேர பயணத்தை ரயில் இயக்கினார். ஜப்பான் வரலாற்றில் வெளிநாட்டவர் பயணிகள் ரயில் இயக்கியது இதுவே முதல் முறை. இந்நிகழ்வை ஜப்பானின் பிரபல டிவி டோக்கியோ தொலைக்காட்சி அரை மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்தது. இந்திய - ஜப்பான் நட்புறவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.
நேஷனல் ஹைஸ்பீடு ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (NHSRCL) நிறுவனம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. ரயில் டிரைவர்கள் மட்டுமல்ல, பொறியாளர்கள், திட்டத் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் ஜப்பானில் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த ஆகஸ்டில் ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, பயிற்சி பெறும் இந்திய டிரைவர்களை நேரில் சந்தித்து ஊக்கமளித்தார்.
ஜப்பானிய 'ஜே ஸ்லாப் டிராக் சிஸ்டம்' தொழில்நுட்பம் இந்திய புல்லட் ரயிலிலும் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டம் முடிந்தால், மும்பை - ஆமதாபாத் பயண நேரம் 6 மணி நேரத்திலிருந்து 2 மணி நேரமாகக் குறையும். இது இந்தியாவின் போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அப்பவே செஞ்சிருந்தா விஜய் ஹீரோ… அத விட்டுட்டு…! TVK அஜிதாவுக்கு குரல் கொடுத்த சரத்குமார்…!