நாடு முழுவதுமே அடுத்தடுத்து இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்படுவது பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வருகிறது. தொழில்நுட்ப கோளாறு மற்றும் பராமரிப்பு பிரச்சனைகள் காரணமாக இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 7 நாட்களாக சென்னையில் மட்டும் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் ஒருபுறம் பிற நிறுவனங்களின் விண்ணை முட்டும் விமான கட்டணத்தோடும், மறுபுறம் கேன்சல் செய்யப்பட்ட விமானத்தின் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கு போராடுவதற்கும் மத்தியில் போராட வேண்டியுள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு விமான இண்டிகோ நிறுவனம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது. கூடுதலாக, டிசம்பர் 5 முதல் 15 வரையிலான பயணத்திற்கான முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது இலவச டிக்கெட் மறு முன்பதிவு வசதியை அறிவித்துள்ளது. உங்கள் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டாலோ அல்லது தாமதமானாலோ உங்கள் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது என பார்க்கலாம்.
இதையும் படிங்க: 20 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சரிவு... ஒரே நாளில் 550 விமானங்கள் ரத்து... பிப்.10 வரை இதுதான் நிலையா?
விமானம் ரத்து செய்யப்பட்டால்:
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) விதிமுறைகளின்படி, விமான நிறுவனங்கள் ஒரு விமானத்தை ரத்து செய்தாலோ அல்லது சரியான நேரத்தில் இயக்கவில்லை என்றாலோ பயணிகளுக்கு பின்வரும் உரிமைகள் உள்ளன.
முழு பணத்தைத் திரும்பப் பெறுதல்: பயணிகளுக்கு டிக்கெட்டுக்காக செலுத்தப்பட்ட முழுப் பணத்தையும் திரும்பப் பெற உரிமை உண்டு.
இலவச மறு முன்பதிவு: கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்தாமல், டிக்கெட்டை பின்னர் வேறொரு விமானத்திற்கு மாற்றிக்கொள்ள (மறு முன்பதிவு) ஒரு வழி உள்ளது.
திருப்பிச் செலுத்த முடியாத டிக்கெட்டுகளுக்கும் ரீஃபண்ட்: இதுபோன்ற விதிவிலக்கான சூழ்நிலைகளில் திருப்பிச் செலுத்த முடியாத அல்லது விளம்பர டிக்கெட்டுகளுக்கும் கூட முழு பணத்தைத் திரும்பப் பெறலாம்.
கட்டணம் செலுத்தும் முறை: டிக்கெட்டுக்கு நீங்கள் பணம் செலுத்தப் பயன்படுத்திய அதே முறையைப் பயன்படுத்தி பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு விமான நிறுவனம் பொறுப்பாகும்.
பணத்தைத் திரும்பப் பெறுதல் & மீண்டும் முன்பதிவு செய்தல்:
உங்கள் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டால், பணத்தைத் திரும்பப் பெற அல்லது மறு முன்பதிவு செய்ய நீங்கள் என்ன செய்யலாம் என பார்க்கலாம்.
- இண்டிகோ நிறுவனத்தின் வெப்சைட் அல்லது மொபை ஆப்பிற்கு செல்லவும்.
- அங்கு தோன்றும் 'முன்பதிவை நிர்வகி' விருப்பத்தை கிளிக் செய்யவும்.
- உங்கள் PNR எண்/முன்பதிவு குறிப்பு, கடைசி பெயரை உள்ளிட்டு உங்கள் முன்பதிவைச் சரிபார்க்கவும். உங்கள் விமானம் ரத்துசெய்யப்பட்டது திரையில் காண்பிக்கப்படும். உங்கள் விமானம் ரத்து செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், இரண்டு ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும், முழு பணத்தைத் திரும்பப் பெறுதல் அல்லது கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் மீண்டும் முன்பதிவு செய்தல்.
- உங்களுக்கு எந்த விருப்பம் வேண்டுமோ அதை தேர்வு செய்யவும்.
- பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், 'ரத்துசெய்தல்/திரும்பப் பெறுதல்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் PNR, மின்னஞ்சல் ஐடி மற்றும் பிற விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
பணத்தைத் திரும்பப் பெறுவது எப்படி?
ஆன்லைன் கட்டணம்: நீங்கள் ஆன்லைனில் பணம் செலுத்தியிருந்தால் (அட்டைகள்/நெட் பேங்கிங்), பணத்தைத் திரும்பப் பெறும் தொகை 5-7 வணிக நாட்களுக்குள் உங்கள் வங்கிக் கணக்கு அல்லது கார்டில் வரவு வைக்கப்படும்.
ரொக்கமாக பணம் செலுத்துதல்: நீங்கள் ரொக்கமாக பணம் செலுத்தியிருந்தால், விமான நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டரைத் தொடர்பு கொண்டு உங்கள் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றினைக் காட்டி உங்கள் பணத்தை எடுக்கலாம்.
பயண முகவர்கள்/மூன்றாம் தரப்பு போர்டல்கள்: நீங்கள் ஒரு முகவர் அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்கள் மூலம் முன்பதிவு செய்திருந்தால், அந்த நிறுவனங்கள் பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறையை நிறைவு செய்யும். உதவிக்கு நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இது இண்டிகோ நிறுவனத்திற்கு மட்டுமல்ல, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர், ஏர் இந்தியா, விஸ்டாரா போன்ற பிற விமான நிறுவனங்களும் பல விமானப் பயணிகள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவது அல்லது எக்ஸ்ட்ரா கட்டணங்கள் இல்லாமல் மீண்டும் முன்பதிவு செய்வது என இரண்டு ஆப்ஷன்களை தருகின்றன.
இதையும் படிங்க: அப்பாவின் ஆட்சியில் காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்... நயினார் நாகேந்திரன் கடும் குற்றச்சாட்டு..!